நுவரெலியாவில் அதிகளவில் மாத்திரைகளை உட்கொண்ட பாடசாலை மாணவி உயிரிழப்பு

116 0

நுவரெலியா ஸ்கிராப் தோட்டத்தில் பாட்டியின் முழுமையான  அரவணைப்பில் வாழ்ந்து வந்த 15 வயதுடைய பாடசாலை மாணவி இரத்த அழுத்தத்தை குறைக்கும் மாத்திரைகளை  அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

கடந்த (25) ஆம் திகதி பாட்டி வீட்டில் இல்லாத நேரத்தில் பாட்டி பயன்படுத்தி வந்த இரத்த அழுத்தத்தை குறைக்கும் மாத்திரைகளை அதிக அளவில்  உட்கொண்டு மயக்கம் உற்ற நிலையில் அயலவர்களின் உதவியுடன் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை (27) உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமியின் தாய் சிறு வயதில் உயிரிழந்த நிலையில் தந்தை வேறொரு பெண்ணை ரகசிய திருமணம் செய்து கொண்டு நானுஓயா பிரதேசத்தில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். எனினும், குறித்த சிறுமி உயிரிழந்த சம்பவம் தந்தைக்கு தெரியாத நிலையில் நுவரெலியா பொலிஸாரின் உதவியுடன் தந்தையை தேடி பிரேத பரிசோதனையின் பின் சடலம் (29) தந்தையிடம் ஒப்படைக்கப்படுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும், குறித்த சிறுமி இரத்த அழுத்தத்தை குறைக்கும் மாத்திரைகளை தானாகவே அதிக அளவில் உட்கொண்டாரா ? அல்லது வேறு யாரேனும் அவருக்குத் தெரியாமலேயே அதிக அளவில் மாத்திரைகளை கொடுத்தனரா ? என்ற பல கோணத்தில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.