சென்னை மெட்ரோ ரயில்களில் சரியான ஏசி வசதி அளவை உறுதி செய்ய பயணிகள் வலியுறுத்தல்

17 0

கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சென்னை மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோரயில் நிலையங்களில் சரியான அளவில் ஏசி வசதி இருப்பதை மெட்ரோ ரயில் நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

சென்னையில் தினமும் 2.60 லட்சம் முதல் 3 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணிக்கின்றனர். தற்போது, கோடை வெயில் தாக்கம் அதிகரித்து உள்ளதால், மெட்ரோ ரயில் நிலையங்களில் தினசரி காலை, மாலை வேளைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது.

பயணிகள் குற்றச்சாட்டு: இந்நிலையில், மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களின் உள்பகுதியில் குளிர்சாதன அளவு (ஏசி அளவு) குறைக்கப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து மெட்ரோ ரயில் பயணிகள் கூறியதாவது:

அதிக பயணிகள் வருகை: மெட்ரோ ரயில் நிலையங்களில் தினமும் காலை நேரத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. அப்போது வெப்பத்தின் தாக்கமும் அதிகமாக இருக்கிறது. ஆனால், மெட்ரோ ரயில்கள் உள்பகுதி மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் போதிய குளிர்ச்சி இல்லை.

கடந்த சில மாதங்களாகவே மெட்ரோ ரயில் நிலையங்களின் நடைமேடைகள் மற்றும் ரயில்களின் உள்பகுதியில் குளிர்சாதன (குளிர்ச்சி) அளவு குறைவாகவே உள்ளது. எனவே, மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் உள்பகுதியில் ஏசி வசதியை மெட்ரோ ரயில் நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.