‘மாஸ்டர் செஃப் ஆஸி.’ நடுவர்களைக் கவர்ந்த இந்திய வம்சாவளி போட்டியாளரின் பானி பூரி!

16 0

பிரபலமான இந்திய சாலையோர உணவான பானி பூரி, ‘மாஸ்டர் செஃப் ஆஸ்திரேலியா’வின் சீசன் 16-ல் இடம்பிடித்து நடுவர்களைக் கவர்ந்துள்ளது. சமீபத்தில் ஒளிபரப்பப்பட்ட அந்த சமையல் போட்டி நிகழ்ச்சியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த போட்டியாளரான சுமீத் சைகல் தனது விருப்பத்துக்குரிய பானி பூரியை தனித்த சுவையுடன் தயாரித்து நடுவர்களைக் கவர்ந்துள்ளார்.

மாஸ்டர் செஃப் ஆஸ்திரேலியா நிகழ்ச்சியில் இதற்கு முன்பு பல இந்திய வம்சாவளி போட்டியாளர்கள் தங்களின் முத்திரையைப் பதித்துள்ளனர். சஷி செலியா மற்றும் ஜஸ்டின் நாராயண் ஆகியோர் முறையே 2018 மற்றும் 2021 ஆண்டுகளில் மாஸ்டர் ஷெஃப் பட்டங்களையும் வென்றுள்ளனர். அதேபோல திபேந்தர் சிபேர், சந்தீப் பண்டிட் மற்றும் அதி நேவ்கி ஆகியோர் தங்களின் சமையல் திறமையால் நடுவர்களைக் கவரவும் செய்துள்ளனர்.

இந்த நிலையில், மாஸ்டர் செஃப் சீசன் 16-ன் போட்டியாளரான சுமீத் சைகல் தனது சுவையான உணவால் நடுவர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். 46 வயதான இந்த இந்திய வம்சாவளிப் போட்டியாளர் தயாரித்த பானி பூரியின் சுவையில் நடுவர்கள் வியந்துள்ளனர்.

தற்போது வைரலாகி வரும் இந்த நிகழ்ச்சியின் ப்ரமோவில், சுமீத் பானி பூரியை எவ்வாறு சாப்பிடுவது என்று நடுவர்களுக்கு காட்டுகிறார். பானி பூரியின் தலையில் மெல்லத் தட்டி உடைத்து அதில் உருளைக்கிழங்கு மசாலா கலவை, புதினா – கொத்தமல்லி சட்னி மற்றும் பேரீச்சைபழம் – புளி சட்னியை நிரப்பி வழங்கினார். நாவினை ஊறச்செய்த இந்த பதார்த்தம் நடுவர்களை ‘வாவ்’ எனக் கூறச் செய்ததுடன், சகபோட்டியாளர்களிடம் இருந்தும் பாராட்டைப் பெற்றுத் தந்தது.

பானி பூரியின் சேர்மானங்கள் மற்றும் அதன் சுவையுடன் சுமீத் அந்த உணவு குறித்து கொடுத்த விளக்கமும் நடுவர்களுக்கு ஒரு தனிப்பட்ட உணர்வைத் தந்து நடுவர்களின் அனுபவத்தை அதிகப்படுத்தியிருக்கலாம்.

நிகழ்ச்சியில் இடம்பிடித்து அனைவரையும் கவர்ந்த இந்திய உணவினை பரிமாறிய அனுபவம் குறித்து சுமீத் தெரிவிக்கையில், “பானி பூரியின் சுவையையும், பரவசத்தையும் நடுவர்கள் அனுபவித்ததைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்ததது. அதை அவர்கள் விரும்பிச் சுவைத்தனர். கடவுளே அப்போது நான் நிலவின் மேல் இருப்பதாக உணர்ந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

பதின்ம வயது இரட்டைக் குழந்தைகளின் தாயாரான சுமீத், மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகத் தான் பார்த்து வந்த விற்பனை மேலாளர் பதவியை விட்டுள்ளார். தனது சமையல் அபிலாஷைகளை நிகழ்ச்சியில் காட்டுவதற்காக அவர் இந்தத் துணிச்சலான முடிவை எடுத்துள்ளார். இந்த ஆண்டு மாஸ்டர் செஃப் ஆஸ்திரேலியா நிகழ்ச்சியில் சுமீத் சைகல் மற்றும் தார்ஷ் கிளார்க் என இரண்டு இந்திய வம்சாவளி போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.