நுவரெலியாவில் கடும் வறட்சியால் குறைவடையும் நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம்

16 0

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் குறைந்து வருகிறது.

கடந்த இரண்டு மாதங்களாக மத்திய மலைநாட்டில் நுவரேலியா மாவட்டத்தில் கடுமையான வெப்பமான வானிலை காரணமாக நீர்த் தேக்க பகுதிகளிலுள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

இதன் காரணமாக மஸ்கெலியா மவுஸ்சாகலை நீர்த் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட சுமார் 45 அடி குறைந்துள்ளது.

நீர்த் தேக்கத்தின் நீர் மட்டம் குறைந்து உள்ளதால் 1968ஆம் ஆண்டில் நீரில் மூழ்கிய அனைத்து வணக்க ஸ்தலங்களும் தற்போது வெளியே அவதானிக்கக் கூடிய அளவில் உள்ளது.

குறிப்பாக சண்முக நாதர் ஆலயம், பௌத்த விகாரையில் இருந்த புத்தரின் சிலை, அதன் அருகில் இருந்த போதி மரம், இஸ்லாமிய பள்ளியின் தூபி மற்றும் கங்கேவத்தை நகரில் இருந்த சித்தி விநாயகர் ஆலயம் என்பனவற்றுடன்  வெள்ளையர்களால் கட்டப்பட்ட பாலம் என்பன தற்போது பார்க்க கூடிய அளவில் உள்ளது. காசல்ரீ, மேல் கொத்மலை ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது.

அதேவேளை நுவரேலியா பிரதேசத்தில் ஊற்று கிணறுகளில் நீர் வற்றிப் போயுள்ளதால் குடி நீருக்கும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.

குடிநீர் தட்டுப்பாட்டால் நுவரேலியா மாநகரசபையால் விநியோகிக்கப்படுகின்ற குழாய் குடிநீர் தினந்தோறும் 24 மணித்தியாலத்திற்கு வழங்கப்பட்டது. நீர் தட்டுப்பாட்டால் குழாய் குடிநீர் தற்பொழுது ஒரு மணித்தியாலத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் தற்பொழுது வசந்தகால நிகழ்வுகள் நடைபெறுவதால் வெளிமாவட்டங்களிலிருந்து பெருந்தொகையான சுற்றுலாப்பயனாளிகள் நுவரேலியாவிற்கு வருகை தந்துள்ளதால் குடிநீர் பெற்றுகொள்ள மக்கள் அவதிப்படுகின்னர். என்பதும் குறிப்பிடதக்கது.