இலங்கை இராணுவத்தினர் உக்ரைன் – ரஷ்யா யுத்தகளத்தில் மோதிக்கொள்கிறார்கள்

18 0

விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக போராடிய இலங்கை இராணுவத்தினர்  இன்று உக்ரைன் மற்றும் ரஷ்யா இராணுவத்தில் சேர்ந்து மோதிக் கொள்கிறார்கள்.

இராணுவ முகாம் உதவியாளர்களாக இலங்கையர்கள் அழைக்கப்பட்டு பலவந்தமான முறையில் யுத்த களத்துக்கு  அனுப்பி வைக்கப்படுகிறார்கள். சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்படும் இச்செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24)  இடம்பெற்ற அமர்வின் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

இலங்கை இராணுவ சேவையில் இருந்து ஓய்வுப் பெற்ற இராணுவத்தினர்  உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இராணுவ முகாம் உதவியாளர் சேவைக்கு அழைத்து பின்னர் பலவந்தமான முறையில் யுத்த களத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

அண்மையில் குசந்த குணதிலக என்ற ஓய்வுப்பெற்ற இராணுவ அதிகாரி உட்பட இருவர் பலவந்தமான முறையில்  யுத்த தாங்கிக்குள்  சேவைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள்.இவ்வாறான நிலையில்  இரு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளார்.குசந்த குணதிலக என்பவர் காணாமல் போயுள்ளார்.

உக்ரைன் மற்றும் ரஷ்ய இராணுவ சேவையில் இலங்கையர்களுக்கு  தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு பாரிய மோசடிகள் முன்னெடுக்கப்படுகிறது.ஒரு நபரிடமிருந்து தலா 18 இலட்சம் ரூபா பெற்றுக்கொள்ளப்படுகிறது. சமூக வலைத்தளங்கள் ஊடாகவே தொழில் வாய்ப்புக்கான  விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விடுதலை புலிகள் அமைப்பை இல்லாதொழித்த எமது இராணுவத்தினர் இன்று ரஷ்யா – உக்ரைன் யுத்த களத்தில் மோதிக் கொள்கிறார்கள்.பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள். ஆகவே இவ்விவகாரம் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

இதன்போது எழுந்து பதிலளித்த நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர முக்கியமானதொரு விடயத்தை முன்வைத்துள்ளார். இலங்கை இராணுவத்தினர் இலங்கையர்கள் உக்ரைன் மற்றும் ரஸ்யா இராணுவத்தில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்காக செல்கிறார்கள்.

இதன் ஊடாக மோசடிகள் இடம்பெறுவதாக குறிப்பிடப்படுகிறது. இவ்விடயம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் அமைச்சு மட்டத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்விடயம் தொடர்பில் பொது மக்கள்  பாதுகாப்பு அமைச்சுடன் கலந்துரையாடி முழுமையான விபரத்தை அறிவிக்கிறேன் என்றார்.