எம்மை பற்றி சர்வதேசம் வெகுவாக கரிசணை காட்ட முடியாத நிலையில் உள்ளது

11 0

உலகம்  இன்றளவில் மூன்றாம் உலக மகா யுத்தத்தை எதிர்நோக்கியுள்ளது. எம்மை பற்றி சர்வதேசம் வெகுவாக கரிசணை காட்ட முடியாத நிலையில் உள்ளது. ஆனால் நாம் அவர்களுக்கு இங்கு நடந்தவற்றையும், நடப்பவற்றையும் கூறிக் கொண்டே இருக்க வேண்டும். அதனையே இந்நூலின் ஊடாக நாம் செய்துள்ளோம் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளரும்,பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு பொது வாக்கெடுப்பை தாமதமின்றி இயற்றுதல் அவசியம், ஏற்கெனவே வடகிழக்கில் தமிழர்களின் பாரம்பரிய இடங்கள் பறிபோய் வேற்றினத்தவர் அங்கு குடி கொண்டுள்ளனர். அதன் விளைவாக எம்மக்கள் பலர் வெளிநாடுகளில் குடியேறியுள்ளனர். இது தொடர்ந்தால் இவ்விரு மாகாணங்களிலும் வாக்களிப்பதற்கு தமிழ் மக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

தமிழ் மக்கள் கூட்டணியினால்  தயாரிக்கப்பட்டுள்ள ‘இலங்கையில் கட்டமைத்த இனவழிப்பும், தமிழ் மக்களின் இனசுத்திகரிப்பும்’ எனும் தலைப்பிலான ஆங்கில நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று சனிக்கிழமை (20)  யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள அலுவலக வாசஸ்தலத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் மேலும் கூறியதாவது,

இது எமது இளம் கட்சியின் முக்கியமான பொதுக்கூட்டம். இந்நூலில் இதுவரை காலமும் இலங்கை தம்pழ் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அநியாயங்களை ஆவணப்படுத்தியுள்ளோம். இந்நூலின் தமிழ் மற்றும் சிங்கள மொழிப்பெயர்ப்புக்கள் விரைவில் வெளிவரவுள்ளன. பிற நாட்டு நல்லறிஞர்களுடனும் இராஜதந்திரிகளுடனும், ஐக்கிய நாடுகள் போன்ற சர்வதேச கட்டமைப்புக்களுடனும் எமது நிலையை அவர்கள் புரிந்துக் கொள்ளவும் எதிர்வரும் காலத்தில் இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் பொது மக்கள் வாக்கெடுப்பு ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை நிகழ்த்தவும் உள்நாட்டு மற்றும் புலம்பெயர் தமிழ் மக்கள் எமது நிலைபற்றிய ஒரு கைநூலை கொண்டிருக்கவும் ஏதுவாக இந்த நூலை தற்போது வெளியிடுகிறோம். ஜனாதிபதி தேர்தல் வருகின்றதோ, இல்லையோ என்பதை நான் அறியேன். அதன் பின்னர் பாராhளுமன்றத் தேர்தல் நடைப்பெறுமோ என்றும் கூற முடியாது. தற்போதைய அரசாங்கம் மேலும் தொடர பொது மக்கள் வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்படுமோ? நான் அறியேன். ஆனால் எமது தமிழ் மக்கள் நிலை பற்றிய ஆவணத்தை தற்போது வெளியிடுவது தான் சாலச்சிறந்தது என்று நாம் கருதுகிறோம்.

தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கும் ஆவணங்களாக இதுவரையில் இரண்டு முக்கிய ஆவணங்கள் வெளிவந்துள்ளன. முதலாவது 30 வருடகால அஹிம்சை வழி போராட்டத்தின் பின்னர் 1976 இல் வெளியிடப்பட்ட வட்டுக்கோட்டை பிரகடனம், இரண்டாவது 30 வருட கால ஆயுதப் போராட்டத்தின் பின்னர் வெளியிடப்பட்ட வடமாகண சபையின் 2015 ஆம ஆண்டு இனவழிப்பு தீர்மானம்.தற்போதைய நூல் மேற்கண்ட இரு ஆவணங்களின் தொடர்ச்சியாகவே வெளியிடப்படுகிறது.

இதன் உள்ளடக்கங்களை வாசித்து அறிபவர்கள் எம் மக்களுக்கு இதுவரையில் நடந்த அநியாயங்களை ஓரளவுக்கு புரிந்துக் கொள்வார்கள். எமது இந்த நூலின் குறிக்கோள் நடந்தவற்றை தெரியப்படுத்தலும், தெளிவான நடவடிக்கைகளை உலக அரங்கில் ஏற்படுத்தலுமே ஆகும். பலர் நடந்தவற்றை அறியாமலேயே தமது கருத்துக்களை தெரிவிப்பார்கள். அது தவறு இந்நூலை படித்து விட்டு அவர்கள் தம் கருத்துக்களை வெளியிடலாம்.

அதேபோன்று பொறுப்புக்கூறல், நீதியை பெற்றுக்கொள்ளல், வட, கிழக்கு தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை சர்வதேசத்துக்கு எடுத்துரைத்து எமக்கான பொதுமக்கள் வாக்கெடுப்பை உறுதி செய்தல் போன்றவையும் எமது நோக்கங்களாக உள்ளன.

பொது வாக்கெடுப்பை தாமதமின்றி இயற்றுதல் அவசியம், ஏற்கெனவே வடகிழக்கில் தமிழர்களின் பாரம்பரிய இடங்கள் பறிபோய் வேற்றினத்தவர் அங்கு குடி கொண்டுள்ளனர். அதன் விளைவாக எம்மக்கள் பலர் வெளிநாடுகளில் குடியேறியுள்ளனர். இது தொடர்ந்தால் இவ்விரு மாகாணங்களிலும் வாக்களிப்பதற்கு தமிழ் மக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விடும். இது பற்றி அறியதருவதும் இந்நூலை வெளியிடுவதற்கான நோக்கத்தில் ஒன்றாகும்.

உலகம் மூன்றாம் உலகமகா யுத்தத்தை எதிர்நோக்கியுள்ளது. எம்மை பற்றி சர்வதேசம் வெகுவாக கரிசணை காட்ட முடியாத நிலையில் உள்ளது. ஆனால் நாம் அவர்களுக்கு இங்கு நடந்தவற்றையும், நடப்பவற்றையும் கூறிக் கொண்டே இருக்க வேண்டும்.அதனையே இந்நூலின் ஊடாக நாம் செய்துள்ளோம்.