சாய்ந்தமருது கடைகளில் திடீர் சோதனை : வண்டுகள் மொய்க்கும் உணவுகள், பழுதடைந்த தானியங்கள் சிக்கின!

39 0

சுகாதாரமற்ற உணவுப்பொருட்கள் பொதுமக்களுக்கு விற்கப்படுவதை தடுத்து, உணவுப் பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் திடீர் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

அதன் அடிப்படையில், நேற்று (20) சாய்ந்தமருது பிரதேச சில்லறை கடைகள், மொத்த விற்பனை நிலையங்கள், பல்பொருள் விற்பனை நிலையங்கள் போன்றவற்றில் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றன.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸஹீலா இஸ்ஸதீனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்ஷாத் காரியப்பர் தலைமையில் இந்த சோதனை நடவடிக்கை சாய்ந்தமருதில் மேற்கொள்ளப்படுகிறது.

இதன்போது சாய்ந்தமருதின் பிரபல கடைகளில் பாவனைக்கு பொருத்தமற்ற பழுதடைந்த தானியங்கள், வண்டுகள் மற்றும் புழுக்கள் நிறைந்த உணவுகள், மனித பாவனைக்குதவாத உலருணவுகள், மனித ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் பொருட்கள், முறையான களஞ்சிய வசதிகளின்றி வைக்கப்பட்டுள்ள உணவுப்பண்டங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் சாய்ந்தமருது பிரதேச உணவகங்கள், சந்தை, சில்லறை கடைகள், மொத்த விற்பனை நிலையங்கள், சிறிய பல்பொருள் விற்பனை நிலையங்கள் போன்றவற்றை பார்வையிட்ட சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் சுகாதார குழுவினர் இத்தகைய வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் உணவு தயாரிப்பவர்களுக்கு சுகாதார நடைமுறைகளை பேணி உணவுகளை தயாரிக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்தோடு, உணவங்கள் சுத்தமில்லாமல் இருத்தல், உணவு கையாள்கையில் முறையான ஒழுங்கின்மை, நீண்ட நாட்களுக்கு பொருத்தமில்லாதவாறு உணவுகளை தேக்கி வைத்தல், சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்களின் தரம் போன்றவற்றை சுகாதார முறைப்படி பேணுமாறும் ஆலோசனை வழங்கியதோடு அறிவித்தல்களை பேணி நடக்காத உணவகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தனர். அதன் தொடர்ச்சியாகவே இந்த சோதனை நடவடிக்கை இடம்பெற்று வருகின்றன.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்களான ஏ.எல்.எம். ஜெரின், ஜே.எம்.நிஸ்தார், காரியாலய உத்தியோகத்தர் எம்.எச்.எம். பிர்தௌஸ் உட்பட பலரும் இந்த திடீர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.