மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

24 0

இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் இன்று (19) தனது 89ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார்.

உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952 மற்றும் 1956ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்கேற்ற பெருமையை பெற்றுள்ளார்.

1958ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் உயரம் பாய்தலில் 1.95 உயரத்துக்கு ஆற்றலை வெளிப்படுத்தி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.

இதன் மூலம் சர்வதேச மெய்வல்லுநர் அரங்கில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் ஈட்டிக்கொடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சிறப்பும் நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்துக்கு உள்ளது.

1962ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் உயரம் பாய்தலில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

யாழ்ப்பாணம் பெரியவிளானில் 1933 ஆகஸ்ட் 24ஆம் திகதி பிறந்த இவர் யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார்.

பாடசாலை பருவத்திலேயே உயரம் பாய்தலில் அகில இலங்கை சாதனையை முறியடித்த பெருமையும் அவருக்கு உள்ளது.

இலங்கை, சியேரா லியோன், பப்புவா நியூ கினியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றியுள்ள நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் யுனெஸ்கோவிலும் 5 ஆண்டுகள் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது