பண்டிதர் ம.ந.கடம்பேசுவரனின் மறைவு சைவத்தமிழ் உலகுக்கு பேரிழப்பாகும்

34 0

பண்டிதர் ம.ந.கடம்பேசுவரனின் மறைவு சைவத்தமிழ் உலகுக்கு பேரிழப்பாகும் என அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் (யாழ்ப்பாணம்) செயலாளர் சைவப்புலவர் செ.த.குமரன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர்,

நூற்றாண்டு கடந்த வரலாற்றை கொண்டதும், ஈழத்தின் பழம்பெரும் அறிஞர்களால் தோற்றுவிக்கப்பட்டதும், பல பண்டிதர்களை இத்தமிழுலகுக்கு அளித்ததுமான ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தை கடந்த 40 வருடங்களாக போற்றிப் பணியாற்றிய பெருந்தமிழ்மகன். தமிழ் மூச்சே உயிர்மூச்சு என்ற அசையாத நம்பிக்கையோடு சங்கத்தை திறம்பட வழிநடத்தி பண்டிதர் மரபை நம் மண்ணுக்கு அளித்த பெருமகனார்.

தமிழோடு சைவத்தின் மீது கொண்ட பற்றின் காரணமாக சைவப்புலவர்களை இம்மண்ணில் பிரசவிக்க வேண்டும் எனும் பேரவாவின் காரணமாக மரபு வழி குரு மரபில் இலக்கணத்தை தோற்றுவித்த நாவலர் பெருமான் உருவாக்கிய நாவலர் மகா வித்தியாலயத்தில் மூன்று தசாப்தத்துக்கு மேலாக இளஞ்சைவப்புலவர், சைவப்புலவர் பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவர்களுக்கு இலக்கண பாடத்தினை இலகுபாடமாக்கி கற்பித்த நல்லாசான் ஆவார்.

தொல்காப்பியத்தை விருப்புடனும் அனைவர் மனதிலும் பதிந்து விருப்புடன் கற்க இலகுபடுத்தி கற்பித்த பெருமகனார்.

காப்பியதாசன் என்று போற்றப்படும் தொல்காப்பிய விற்பன்னன். தொல்காப்பியத்தை கற்பிப்பதில் இவருக்கு இணையாக யாரையும் ஒப்பிட இயலாத பெருந்தகை.

தொல்காப்பியத்தோடு நன்னூல், நன்னூல் கண்டிகையுரை ஆகியவற்றையும் விருப்புடன் கற்பித்து இளஞ்சைவப்புலவர், சைவப்புலவர் பட்டத்தின் ஒரு பாடத்துக்குரிய இலக்கண பாடத்தை மாணவர்கள் கற்று சித்தியடையச் செய்தவர்.

நீண்டகாலமாக சைவப்புலவர் பட்டப் பரீட்சைக்குழுவில் இலக்கண வினாத்தாள் தயாரிப்பாளராக, மதிப்பீட்டாளராக நடுநிலையுடன் இரகசியத் தன்மையுடன் பணியாற்றி, சைவப்புலவர் சங்கத்தின் மூத்த சைவப்புலவர்களினால் நன்மதிப்பைப் பெற்றவர். குறுகிய சில வருடங்களாக தன் உடல் நிலை காரணமாக இப்பணியில் இருந்து விலகியிருந்தார்.

சைவத்தமிழ் மரபில் தமிழ்ப் பண்டிதர்களையும் சைவப்புலவர்களையும் உருவாக்கிய பெருமகனார் பண்டிதர் ம.ந. கடம்பேசுவரன் அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை நிறைவு செய்துகொண்டார்.

பிறந்தவர் மண்ணில் மறைவது இயல்பு என்ற சிந்தனைக்கமைய காலம் தன் கடமையை நிறைவேற்றியுள்ளது. உயர் தமிழ் மகனாரின் ஆத்மா பார்வதி சமேத பரமேஸ்வரனின் பாதார விந்தங்களை அடைந்து பேரின்பப் பெருவாழ்வு வாழ பிரார்த்திக்கின்றோம்.

பண்டிதமணி ஐயாவுக்கு வெறும் இரங்கல்களையோ அனுதாபங்களையோ தெரிவித்துவிட்டு கடந்துவிடும் இழப்பல்ல  இந்த இழப்பு. அசராத தமிழ்ப் பாண்டித்தியத்தின் ஒரு தலைமுறையின் இழப்பு. கடந்துவந்த பல தசாப்தங்களில் புலமையையும் தமிழ் மரபுக் கல்வியையும் கடத்திவந்த, காவி வந்த, தொடரின் ஒரு பெரும் அத்தியாயம் இவர்.

ஈழத்து மரபுத்தமிழ் கல்வி வரலாற்றில் அழித்துவிட முடியாத எங்கள் பண்டிதர் ஐயாவுக்கு அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் சார்பில் அஞ்சலிகளை செலுத்தி நிற்கிறோம். அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து நிற்கின்றோம்… என இரங்கல் தெரிவித்துள்ளார்.