“அவர்கள் நாட்டுக்குள்ளேயே…” – பிரதமர் மோடியின் கருத்தும் அமெரிக்கா எதிர்வினையும்

23 0

“நாட்டில் தற்போது வலிமையான அரசு உள்ளது. இதன் காரணமாக நமது ராணுவ வீரர்கள், பயங்கரவாதிகளை அவர்களின் நாட்டுக்குள்ளேயே புகுந்து கொல்கிறார்கள்.” என பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்த கருத்துக்கு அமெரிக்கா எதிர்வினையாற்றியுள்ளது.

கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி, உத்தராகண்ட்டின் ரிஷிகேஷ் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, “நாட்டில் தற்போது வலிமையான அரசு உள்ளது. இதன் காரணமாக நமது ராணுவ வீரர்கள், பயங்கரவாதிகளை அவர்களின் நாட்டுக்குள்ளேயே புகுந்து கொல்கிறார்கள். ஆனால், எப்போதெல்லாம் பலவீனமான அரசுகள் இருந்தனவோ அப்போதெல்லாம் அதனை நமது நாட்டின் எதிரிகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் பயங்கரவாதம் பரவியிருக்கிறது.” எனப் பேசியிருந்தார்.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் அளித்துள்ள பேட்டியில், “இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களுக்குள்ளான பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் சரி செய்து கொள்ள வேண்டும். ஏற்கெனவே சொன்னது போல் இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான பிரச்சினையில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. ஆனால் இந்தியாவும், பாகிஸ்தானும் பிரச்சினையை தீவிரமாக்காமல் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும் என்பதை நாங்கள் எப்போதுமே ஊக்குவிக்கிறோம்” என்றார்.

முன்னதாக, கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி தி கார்டியன் பத்திரிகை “இந்தியா கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் பாகிஸ்தானில் 20 பேரை கொன்றுள்ளது. அந்நிய மண்ணில் உள்ள தீவிரவாதிகளை வீழ்த்துதல் என்ற விரிவான தீவிரவாத ஒழிப்புத் திட்டத்தின் கீழ் இதனை இந்தியா செய்துள்ளது” என்று செய்தி வெளியிட்டிருந்தது.

இதற்கு மத்திய அரசு “அந்த அறிக்கை முற்றிலும் தவறானது, தீங்கானது, இந்தியாவுக்கு எதிரானது” என்று எதிர்ப்பை பதிவு செய்திருந்தது.

இது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “இங்கே தீவிரவாதச் செயல்களைச் செய்துவிட்டு தீவிரவாதிகள் பாகிஸ்தானுக்கு தப்பி ஓடினாலும் நாங்கள் அங்கேயே சென்று அவர்களை வீழ்த்துவோம். இந்தியா எப்போதுமே அண்டை நாடுகளுடன் நல்லுறவு பேணவே விரும்புகிறது. ஆனால் எவரேனும் இந்தியா மீது மீண்டும், மீண்டும் கோபப் பார்வையை வீசினால், இந்தியாவில் தீவிரவாதத்தை விதைக்க முயன்றால் நாங்கள் அவர்களை விடமாட்டோம்.” என்று கூறியிருந்தார்.

“ராஜ்நாத் சிங்கின் பேச்சு பகையைத் தூண்டும் விதமாக உள்ளது. இது நீண்ட காலத்துக்கு ஏற்படக்கூடிய ஆக்கபூர்வ பேச்சுவார்த்தைகளுக்கு தடையாக அமையும். பிராந்திய அமைதியை பாகிஸ்தான் விரும்புகிறது.” என்று பாகிஸ்தான் கருத்து தெரிவித்திருந்தது. இந்நிலையில் அமெரிக்கா தற்போது இந்தக் கருத்தினை முன்வைத்துள்ளது.