ஊழலை சட்டப்பூர்வமாக்கியது பாஜக: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

25 0

கோவை செட்டிப்பாளையம் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

சகோதரர் ராகுல் நடைபயணம் மேற்கொண்டு உருவாக்கியுள்ள காங்கிரஸ் தேர்தல் அறிக்கைதான் இந்த தேர்தலில் கதாநாயகன். ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்,மத்திய அரசு பணியில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு என பல வாக்குறுதிகளை ராகுல் காந்தி அளித்துள்ளார்.எப்போதும் வெளிநாட்டு சுற்றுலாவிலேயே இருக்கும் பிரதமர் மோடி, இப்போது தேர்தல் என்பதால் உள்நாட்டில் சுற்றி வருகிறார். குடும்ப கட்சி, ஊழல் கட்சி என இண்டியா கூட்டணி கட்சிகளை வசைபாடுகிறார். அரசியலுக்கு யார்வேண்டுமானாலும் வரலாம். குடும்பத்தினரே என்றால்கூட, தேர்தலில் நின்று, மக்களை சந்தித்து, ஆதரவு பெற்றால்தான் பதவிக்கு வரமுடியும். எங்களை மட்டுமின்றி, எங்களை தேர்ந்தெடுத்த மக்களையும் இதன்மூலம் பிரதமர் அவமதிக்கிறார்.

தேர்தல் பத்திரம் கொண்டுவந்து ஊழலை சட்டப்பூர்வமாக்கியது பாஜகதான். அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, சிபிஐ ஆகிய கூட்டணி அமைப்புகள் மூலம் சோதனைசெய்து மிரட்டி நிதியை பறித்தது பாஜக. சிஏஜி-யில் கூறப்பட்ட ரூ.7 லட்சம் கோடி ஊழல், ரஃபேல் ஊழல் குறித்து கேட்டால், இதுவரை வாய் திறக்கவில்லை.

கார்ப்பரேட் நிறுவனங்களின் பல ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கறுப்பு பணத்தை ஒழிப்பதாக செய்த பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் ஏழைகளின் பணம் பறிக்கப்பட்டது. இதனால், பணப் புழக்கம் குறைந்து தொழில் முடங்கியது. ஜிஎஸ்டி வந்ததால் முதலாளிகள், கடனாளிகள் ஆனார்கள். வங்கதேசத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தால் நூலும், துணியும் முடங்கின. 35 சதவீத மில்கள் மூடவேண்டிய நிலையில் உள்ளன.

தமிழகத்துக்கு வரும் வளர்ச்சி திட்டங்களை திமுக தடுப்பதாக பிரதமர் மோடி கூறியது வடிகட்டிய பொய். தமிழகத்தை சேர்ந்த தொழில் நிறுவனம் ரூ.6,500 கோடி முதலீட்டில் வேலைவாய்ப்பை அளிக்கும் முதலீட்டை மேற்கொள்ள முடிவானது. அவர்களை மிரட்டி தொழில் திட்டத்தை குஜராத்துக்கு மாற்றிவிட்டனர். இதுதான் கோவை மீதான பாஜகவின் போலி பாசம். செமிகண்டக்டர் திட்டத்தை, மிரட்டி குஜராத்துக்கு மடை மாற்றியது பாஜக. கோவை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பது பாஜகவுக்கு பிடிக்கவில்லை.

எனவே, தமிழக வளர்ச்சியை தடுப்பது யார் என மக்களுக்கு நன்றாக தெரியும். எனவே, பாஜக கூட்டணியையும், பாஜக பி டீ-மான அதிமுக கூட்டணியையும் ஒருசேர வீழ்த்த வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

அமைச்சர்கள் முத்துசாமி, சக்கரபாணி, மு.பெ.சாமிநாதன்,டிஆர்பி ராஜா, கயல்விழி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், திருச்சி சிவா எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.