ராமநாதபுரம் படையெடுக்கும் ஓபிஎஸ் அணி நிர்வாகிகளால் பாஜக கூட்டணியில் அதிருப்தி?

33 0

ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பிரச்சாரம் செய்வதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அவரது ஆதரவு மாவட்ட நிர்வாகிகள் ராமநாதபுரத்துக்கு படையெடுப்பதால் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அரசியலில் தன்னுடைய இருப்பை காட்டுவதற்கும், தன்னுடைய செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறார். அதற்காக தற்போது நடக்கும் மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக சுயேச்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இந்தத் தொகுதியில் கிடைக்கும் வெற்றி மூலம், ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் அதிமுகவை கைப்பற்றுவதற்கான நெருக்கடியை பழனிசாமிக்கு கொடுக்கலாம் என அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.சமீபத்தில் ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய சென்ற பீட்டர் அல்போன்ஸ், “பாஜக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மட்டுமே ஒரே ஒரு ‘சீட்’ வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், பாஜக கூட்டணியை விட்டு விலகாமல் போட்டியிடுகிறார். மூன்று முறை முதல்வர், நிதி அமைச்சர், அதிமுக பொருளாளர், கட்சியில் ஜெயலலிதாவுக்கு அடுத்த நிலையில் இருந்தவர் என முக்கிய நபராக வலம் வந்தவர்” என்று தற்போது அவர் சுயேச்சையாக போட்டியிடுவதை எண்ணி பொதுவெளியில் வருத்தப்பட்டு பேசினார்.

இப்படி, அரசியலில் நீடிக்க ராமநாதபுரம் வெற்றி ஒ.பன்னீர்செல்வத்துக்கு அவசர தேவையாக உள்ளது. அதனால், தமிழகம் முழுவதும் உள்ள அவரது ஆதரவு நிர்வாகிகள், ராமநாதபுரம் மாவட்டத்துக்கு படையெத்து வருகின்றனர். மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்ட ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் போன்றோர் தொடர்ந்து ராமநாதபுரத்திலேயே முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

அதனால், மற்ற மாவட்டங்களில் போட்டியிடக் கூடிய பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓ.பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள் பெரும்பாலும் வருவதில்லை. அவர்கள் இல்லாமலே பாஜக கூட்டணி கட்சியினர் பிரச்சாரம் செய்கிறார்கள். இதுபோலவே, டிடிவி தினகரனின் அமமுக நிர்வாகிகளும், தேனி மாவட்டத்தை நோக்கி படையெடுப்பதாலும், பாஜக கூட்டணி வேட்பாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

அதனால், டிடிவி தினகரன், ஓ.பன்னீ்செல்வம் இருவரும் தாங்கள் போட்டியிடும் தொகுதிக்கு தங்கள் அணியின் மற்ற மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் வராமல் இருக்க அறிவுறுத்த வேண்டும் என பாஜக கூட்டணி கட்சி நிர்வாகிகள் எதிர்பார்க்கிறார்கள்.

இது குறித்து மதுரை மாவட்ட ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளர் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘நாங்கள் பிரச்சாரத்துக்கு ராமநாதபுரம் வந்தாலும், கட்சியின் அனைத்து கிளைக் கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகளை ஒருங்கிணைத்துவிட்டுதான் இங்கு வருகிறோம். மேலும், அனைத்து நாட்களும் இங்கு வருவதில்லை. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் வேலைப் பார்க்கிறோம்’’ என்றார்.