திண்டுக்கல் தொகுதி நான்கு முனைப் போட்டியில் முந்துவது யார்?

96 0

தமிழகத்தில் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிகளான திமுக, அதிமுக, பாஜக ஆகிய 3 கட்சிகளும் நேரடியாக போட்டியிடாமல், திண்டுக்கல் தொகுதியை தங்களது கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டன. தொடக்கத்தில் விறுவிறுப்பு இல்லாத கட்சிகளின் தேர்தல் பணிகள், தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 7,80,096 பேர், பெண் வாக்காளர்கள் 8,26,737 பேர், இதரர் 218 பேர் என மொத்தம் 16,07,051 வாக்காளர்கள் உள்ளனர். 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட என்.எஸ்.வி.சித்தன் வெற்றி பெற்றார். 2014-ல் அதிமு கவைச் சேர்ந்த எம்.உதயகுமார், 2019-ல் திமுகவைச் சேர்ந்த ப.வேலுச்சாமி வெற்றி பெற்றனர்.திண்டுக்கல் மக்களவை தொகுதியில் திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, நத்தம், ஆத்தூர் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் திமுகவுக்கு 3 எம்எல்ஏக்களும் (ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழநி), அதிமுகவுக்கு 3 எம்எல்ஏக்களும் (திண்டுக்கல், நிலக்கோட்டை, நத்தம்) உள்ளனர்.

திமுக, அதிமுக நேரடியாக வேட்பாளர்களை களம் இறக்கியிருந்தால் சமபலத்தில் போட்டி இருந்திருக்கும். ஆனால், 2 பிரதான கட்சி களும் தங்களது கூட்டணி வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளன. திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஆர்.சச்சி தானந்தம், அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக் போட்டியிடுகின்றனர். அதேபோல், பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் ம.திலகபாமா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் கயிலைராஜன் போட்டியிடுகிறார்.

கயிலைராஜன்

மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் களமிறங்கி தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த முறை திமுக வேட்பாளர் ப.வேலுச் சாமி 7,46,523 வாக்குகள் பெற்று 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக் குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தமிழகத்தில் முதலிடம் பெற்றார். இதனால், இந்த முறையும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற திமுக கூட்டணியினர் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

எஸ்டிபிஐ வேட்பாளருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், நத்தம் ஆர்.விசுவநாதன் ஆகியோர் தங்கள் கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து தேர்தல் பணியை செய்து வருகின்றனர். கூட்டணி கட்சிகளான தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ கட்சிகளுக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் பெரிய அளவில் கட்டமைப்பு இல்லா ததால், முழுக்க முழுக்க அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களை நம்பியே தேர்தல் பணிகள் நடந்து வருகின்றன.

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது எஸ்டிபிஐ கட்சி வேட்பாளருக்கு கூடுதல் பலமாக இருக்கிறது. பாஜக கூட்டணியில் போட்டி யிடும் பாமக வேட்பாளர் ம.திலகபாமா கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். இந்த முறை திண் டுக்கல் மக்களவைத் தேர்தலில் களமிறங்கியுள்ளார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் வாக்கு வங்கியுள்ள அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிட்ட ஜோதிமுத்து 2,07,551 வாக்குகளை தான் பெற முடிந்தது. இந்த முறை பாஜக கூட்டணியில் போட்டியிடும் பாமக, கடந்த முறை வாங்கிய வாக்குகளைவிட கூடுதல் வாக்குகளை பெற முயற்சித்து வருகிறது.

நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த மக்களவைத் தேர்தலில் மன்சூர் அலிகான் போட்டியிட்டு 54,957 வாக்குகளை பெற்றார். இந்த முறை அதைவிட கூடுதலாக வாக்குகளை பெற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலைராஜன் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

திண்டுக்கல் தொகுதியில் நிலவும் நான்கு முனைப் போட்டியில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என போட்டி போட்டுக்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீண்ட கால கோரிக்கைகள்:

# திண்டுக்கல்லில் இருந்து சபரிமலைக்கு ரயில் வழித்தடம், திண்டுக்கல் – காரைக்குடி இடையே புதிய ரயில் வழித்தடம் அமைக்க வேண்டும் என்பது பல ஆண்டுகளாக கோரிக்கையாகவே இருந்து வருகிறது.

பழநியை ஆன்மிக சுற்றுலாத் தலமாக மாற்றி வெளிமாநில, வெளிநாட்டு பக்தர்கள் வருகையை அதிகரிக்க, அடிப்படை வசதிகளை மேலும் மேம்படுத்த வேண்டும்.

கொடைக்கானல் சுற்றுலாத் தலத்துக்கு மத்திய, மாநில அரசுகள் போதிய நிதி ஒதுக்குவதில்லை. சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த மத்திய அரசு நிதி பெறுவதில் சுணக்கம் காணப்படுகிறது.

தொழில் நகரமாக இருந்த திண்டுக்கல்லில் தோல் தொழில், பூட்டுத் தொழில் என பல தொழில்கள் நசிந்துபோய் உள்ளன. தற்போதைய சூழலுக்கு ஏற்ப புதிய தொழில்களை கொண்டு வந்து மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்பது திண்டுக்கல் மக்களின் கோரிக்கையாக உள்ளது.