அரச சிறுவர் பாதுகாப்பு நிலையங்களிலுள்ள சுமார் 10 000 சிறுவர்களுக்கு புத்தாண்டு பரிசு

20 0

அரச சிறுவர் பாதுகாப்பு நிலையங்களிலுள்ள சுமார் 10 000 சிறுவர்களுக்கு புத்தாண்டு பரிசுப் பொதிகளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். பாதுகாப்பு பதவிநிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு ஜனாதிபதி இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதற்கமைய ‘சிறுவர் இல்லங்களிலுள்ள சிறுவர்களுக்கு புத்தாண்டு’ என்ற தொனிப்பொருளின் கீழ் 336 சிறுவர் பாதுகாப்பு நிலையங்களிலுள்ள சிறுவர்களுக்கு நாளை சனிக்கிழமை பரிசுப்பொதிகள் வழங்கப்படவுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நுரெலியாவிலுள்ள சிறுவர் இல்லங்களிலுள்ள சிறார்களுக்கு புத்தாண்டு பரிசுப்பொதிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வேலைத்திட்டத்தை இம்முறை சகல சிறுவர் பாதுகாப்பு நிலையங்களிலும் நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இராணுவத்தளபதியின் நேரடி கண்காணிப்பின் கீழ் தனியார் துறையினரின் ஒத்துழைப்பினையும் பெற்றுக் கொண்டு, இராணுவத்தினையும் இணைத்து இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த சிறுவர் பாதுகாப்பு நிலையங்களில் 8721 சிறுவர்கள் காணப்படுகின்றனர். அத்தோடு விசேட தேவையுடைய சிறுவர்களும் உள்ளனர். அனைத்து சிறுவர்களும் புத்தாண்டு மகிழ்ச்சியைப் பெற வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.