ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க கட்சி மட்டத்தில் தீர்மானிக்கவில்லை. பொதுஜன பெரமுனவின் வேட்பாளரையே களமிறக்குவோம். வெகுவிரைவில் எமது தீர்மானத்தை அறிவிப்போம் என பொதுஜன பெரமுனவின் பொருளாளரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் பண்டார தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட பொதுஜன பெரமுனவில் உறுப்பினர்கள் எவரும் இல்லை என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிடுவது அவரது தனிப்பட்ட நிலைப்பாடே தவிர கட்சியின் நிலைப்பாடல்ல.
கட்சி மட்டத்தில் உத்தியோகபூர்வ தீர்மானம் ஒன்று எடுக்கப்படும் பட்சத்தில் தனிப்பட்ட கருத்துக்களை குறிப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கட்சியின் உள்ளக மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை அவர் விளங்கிக் கொள்வார் என்று எதிர்பார்க்கிறேன்.
ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்கும் இயலுமை எமக்கு உள்ளது.வேட்பாளரை அறிவிக்க காலம் உள்ளது.சிறந்ததை இறுதியில் அறிவிப்போம். வெற்றிப்பெறும் வேட்பாளரையே நாங்கள் களமிறக்குவோம் என்பதை பிரசன்ன ரணதுங்க நன்கு அறிவார்.
ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் அவசரமடைய வேண்டிய தேவை கிடையாது.தனித்த ஒரு வேட்பாளரை நாங்கள் களமிறக்குவோம்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்குள் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது.வெளியில் எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் எம்முடன் இணக்கமாக செயற்படுகிறார்கள்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க கட்சி மட்டத்தில் தீர்மானிக்கப்படவில்லை. பொதுஜன பெரமுனவின் வேட்பாளரையே களமிறக்குவோம்.வெகுவிரைவில் எமது தீர்மானத்தை அறிவிப்போம் என்றார்.

