பொருளாதார உறுதிப்படுத்தல் குழுவின் தலைவர் தெரிவு

45 0

9 ஆவது பாராளுமன்றத்தின் 5 ஆவது கூட்டத்தொடருக்கான பொருளாதார உறுதிப்படுத்தல் பற்றிய குழுவின் தலைவராக இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார்.

9 ஆவது பாராளுமன்றத்தின் 5 ஆவது கூட்டத்தொடருக்கான இந்தக் குழுவின் 1 ஆவது கூட்டம் கடந்த ஏப்ரல் 1 ஆம் திகதி இடம்பெற்ற போதே அவர் தெரிவுசெய்யப்பட்டார்.

இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியவின் பெயரை இராஜாங்க அமைச்சர் கனக ஹெரத் பிரேரித்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சீ.பீ. ரத்னாயக அதனை வழிமொழிந்தார்.

4 ஆவது கூட்டத்தொடரின் போதும் பொருளாதார உறுதிப்படுத்தல் பற்றிய குழுவின் தலைவராக இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய பதவி வகித்திருந்தார்.

இந்தக் குழுவின் நோக்கு எல்லை அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் நோக்கு எல்லைக்கு சமமானதாக இருப்பதாகச் சுட்டிக்காட்டிய குழுவின் தலைவர், இதனை மாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். பொருளாதாரம் தொடர்பான சகல தரப்பினரையும் உள்ளடக்கும் வகையில் இந்தக் குழுவின் நோக்கு எல்லை விஸ்தரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் முன்மொழிந்தார்.

எவ்வாறாயினும், குழுவின் நோக்கெல்லையை மாற்றுவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படாததால், அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் குழுவின் அங்கத்தவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் கலந்துரையாட முடியும் என குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். இதற்கமைய எதிர்வரும் தினத்தில் இது தொடர்பில் விசேட அமர்வொன்றை நடத்தவும் குழு தீர்மானித்தது.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் பாராளுமன்ற உறுப்பினர்களான, மனோ கணேசன், சீ.பீ. ரத்னாயக, எஸ்.எம். சந்திரசேன, ஹெக்டர் அப்புஹாமி, சிவஞானம் சிறிதரன், கலாநிதி நாளக கொடஹேவா மற்றும் அகில எல்லாவல உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.