ட்ரோன் மூலம் அவசர சிகிச்சைக்கு மருந்து விநியோகம் செய்ய சோதனை ஓட்டம்

20 0

மத்திய தொழுநோய் பயிற்சி ஆராய்ச்சி நிலையம் சார்பில் கிராம மருத்துவமனைக்கு ட்ரோன் விமானம் மூலம் அவசர சிகிச்சைக்கு மருந்து விநியோகம் செய்ய சோதனை ஓட்டம் நேற்று வெற்றிகரமாக நிறை வேற்றப்பட்டது.

செங்கல்பட்டில் செயல்படும் மத்திய தொழுநோய் பயிற்சி ஆராய்ச்சி நிலையம் சார்பில் மாவட்டத்தில் உள்ள இதர தொழுநோய் மருத்துவமனைகளுக்கு அவசர சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் ரத்தப் பரிசோதனை மாதிரிகளை விரைவாக சிறிய ரக ட்ரோன் விமானம் மூலம் கொண்டு செல்வதற்கான திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதையொட்டி, சிறிய ரக ட்ரோன் விமானம் மூலம் மருந்துகள் கொண்டு செல்லும் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது.

அதிகபட்சமாக 50 கிலோ வரை… செங்கல்பட்டு மத்திய தொழுநோய் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து நந்திவரம் – கூடுவாஞ்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அவசர தேவைக்கு மருந்துகளை ட்ரோன் மூலம் எடுத்து வர சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ட்ரோன் கேமரா நான்கு அடி அகலம், மூன்றடி நீளத்தில் இருந்தது. இதன் மொத்த எடை ஏழரை கிலோ ஆகும். இதில் அதிகபட்சமாக 50 கிலோ வரை கொண்டு செல்ல முடியும்.

நேற்று செங்கல்பட்டில் இருந்து நந்திவரம் அரசு மருத்துவமனைக்கு சுமார் 25 நிமிடத்தில் வெற்றிகரமாக வந்து சேர்ந்தது. இது சாலை மார்க்கமாகவும், நீர் மார்க்கமாகவும் பாதுகாப்பாக செல்வதற்கு உகந்தது. நேற்றுசெங்கல்பட்டு கொளவாய் ஏரி வழியாக கிளம்பி, சாலை மார்க்கமாக 200 அடி உயரத்தில் வெற்றிகரமாக பறந்து வந்து தரையிறங்கியது.