இலங்கை முகங்கொடுத்திருக்கும் காலநிலைமாற்ற சவால்களைக் கையாள்வதற்கு உதவுதல் உள்ளடங்கலாக இருநாடுகளுக்கும் இடையில் நிலவும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உலகளாவிய பசுமை வளர்ச்சி நிலையத்தின் தலைவரும், ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகமுமான பான் கி-மூன் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் உறுதியளித்துள்ளார்.
பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகமும் உலகளாவிய பசுமை வளர்ச்சி நிலையத்தின் தலைவருமான பான் கி-மூன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கடந்த வாரம் சியோலில் நடைபெற்றது.
இதன்போது இலங்கைக்கும் உலகளாவிய பசுமை வளர்ச்சி நிலையத்துக்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பைப் பாராட்டிய பான் கி-மூன், அதனை மேலும் வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாகவும், பல்வேறு துறைகளிலும் இருதரப்பினருக்கும் உள்ள வாய்ப்புக்களை அடையாளம் காண்பதாகவும் பிரதமரிடம் உறுதியளித்தார்.
அதற்குப் பதிலளித்த பிரதமர் தினேஷ் குணவர்தன, ‘புதுப்பிக்கத்தக்க சக்தி வலு, நிலைபேறான போக்குவரத்து வசதி மற்றும் பசுமை நகர உருவாக்கம் ஆகியவற்றின் ஊடாக பசுமையான, அனைவரையும் உள்ளடக்கிய, மீண்டெழும் தன்மையுடைய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது’ எனத் தெரிவித்தார்.
அதேபோன்று இலங்கை ஓர் தீவு நாடு என்பதனால் இலகுவாகக் காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய தாக்கங்களுக்கு உள்ளாகும் நிலையில் இருப்பதாகவும், எனவே அத்தாக்கங்களிலிருந்து நாட்டுமக்களையும், சூழல் கட்டமைப்பையும் பாதுகாப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம் எனவும் சுட்டிக்காட்டிய அவர், இவ்விடயத்தில் அரசாங்கம் முன்னெடுத்துவரும் முயற்சிகளுக்கு அவசியமான ஆதரவை வழங்கக்கூடியவகையில் உலகளாவிய பசுமை வளர்ச்சி நிலையத்துடன் வலுவான பிணைப்பை ஏற்படுத்திக்கொண்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டார்.
இலங்கை கடந்த 2019 ஆம் ஆண்டு உலகளாவிய பசுமை வளர்ச்சி நிலையத்தில் ஓர் உறுப்பு நாடாக இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

