கிராம மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக வவுனியாவில் 29 விவசாயிகளுக்கு தானியங்கள் வழங்கிவைப்பு

20 0

கிராமிய மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக குளங்கள், கிராமங்கள் மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் வவுனியாவில் 29 விவசாயிகளுக்கு தானியங்கள் இன்று (07) வழங்கப்பட்டன.

நீர்ப்பாசன அமைச்சின் கீழ் உள்ள குளங்கள், கிராமங்களின் மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கிராமிய மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக பயிர்ச்செய்கைக்கான தானியங்கள் வழங்கும் வேலைத் திட்டம் நாடு பூராகவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், வவுனியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு தானியங்கள் வழங்கும் நிகழ்வு வவுனியா இலுப்பையடி பகுதியில் அமைந்துள்ள கோவில்குளம் கமநல அபிவிருத்தி நிலையத்தில் இன்று நடைபெற்றது.

இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட குளங்களின் கீழான பயிர்ச்செய்கைக்காக கச்சான், கௌப்பி, பயறு, உழுந்து என்பன வழங்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு கட்டமாக கோவில்குளம் கமநல அபிவிருத்தி நிலையத்தின் கீழ் உள்ள 25 விவசாயிகளுக்கு விதைக் கச்சானும் 2 விவசாயிகளுக்கு கௌப்பி விதைகளும் ஒரு விவசாயிக்கு உழுந்து விதைகளும் மற்றுமொரு விவசாயிக்கு பயறு விதைகளும் என 29 விவசாயிகளுக்கு விதைகள் வழங்கப்பட்டதுடன், பயிர்ச்செய்கை தொடர்பான ஆலோசனை வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.

 

இந்த நிகழ்வில் கோவில்குளம் கமநல அபிவிருத்தி நிலையப் பொறுப்பதிகாரி இரத்தினம் காஞ்சனா, கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலரும் கலந்துகொண்டனர்.