வெடிகுண்டு விபத்தைத் தொடர்ந்து எகிப்தில் அவசர நிலை பிரகடனம்

247 0
எகிப்து தலைநகர் கெய்ரோ அருகில் உள்ளது டான்டா நகரம். அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்த நகரத்தின் முக்கிய பகுதியில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தல், குருத்தோலை ஞாயிறு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அப்போது, தேவாலயத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்துச் சிதறியது. இதில், பிரார்த்தனை செய்துகொண்டிருந்த பலர் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். பலத்த காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் காயமுற்றிருக்கின்றனர். இந்நிலையில் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து அந்நாட்டில் அடுத்த மூன்று மாதத்திற்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அந்நாட்டு குடியரசு தலைவர் அப்தெல் பட்டா அல்-சிசி அறிவித்துள்ளார்.