காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

121 0

மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அக்கட்சியின் தலைமைக் கழகத்தில் இன்று வெளியிடப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “அடிமை அதிமுக அடகு வைத்த, பாசிச பாஜக பறித்த தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்.நாம் வலியுறுத்திய வாக்குறுதிகள் அனைத்தையும் உள்ளடக்கி, மாநிலக் கட்சியான தி.மு.க.வால் நிறைவேற்ற முடியுமா எனக் கேள்வி எழுப்பியோருக்கான தக்க பதிலாக அமைந்துள்ளது காங்கிரஸ் வெளியிட்டுள்ள 2024 தேர்தல் அறிக்கை.அதனால்தான் சொல்கிறோம்.

இது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல; கொள்கையால் ஒன்றிய கூட்டணி ” என்று பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் விவரம் வருமாறு:-* கடந்த 5 ஆண்டுகளில் ஜனநாயகம் பலவீனம் அடைந்து விட்டது.

* நாடு முழுவதும் சமூக, பொருளாதார, சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.*

மத்திய அரசு பணியிடங்களில் 30 லட்சம் காலி பணியிடங்களை நிரப்புவோம்.*

அரசு பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த பணிமுறை நீக்கப்படும்.

* மத்திய அரசு பணிகளில் ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்கள் ஓராண்டில் நிரப்பப்படும்.

* பா.ஜ.க. ஆட்சியில் நீதி மறுக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.* மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும்.

* மூத்த குடிமக்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வூதியம் மாதம் ரூ.1000 வழங்கப்படும்.

* 2025-ம் ஆண்டு முதல் மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும்.

* 2024 மார்ச் மாதம் வரையில் பெறப்பட்ட கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.