யாழில் கைதான தமிழக கடற்தொழிலாளர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

12 0

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான தமிழக கடற்தொழிலாளர்களுக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து அதனை 05 வருடத்திற்கு மன்று ஒத்திவைத்துள்ளது.

அத்துடன் தலா 20 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு செலுத்த உத்தரவிட்ட மன்று , ஆயிரம் மற்றும் ஆயிரத்து 500 ரூபாய் தண்டமும் விதித்துள்ளது

கடந்த 17ஆம் திகதி காரைநகர் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து, கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 21 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்களின் இரண்டு படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றி இருந்தனர்.

அவர்கள் மறுநாள், கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தினர் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை (05) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, கடற்படையினரை தாக்கி சிறுகாயத்தை ஏற்படுத்தியமை , சட்டவிரோதமான முறையில் கூட்டம் கூடியமை , அரச கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன.

குற்றச்சாட்டுக்களை கடற்தொழிலாளர்கள் ஏற்றுக்கொண்டதை அடுத்து,  தலா 20 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு செலுத்த மன்று உத்தரவிட்டதுடன்  ஆயிரம் மற்றும் ஆயிரத்து 500 ரூபாய் தண்டமும் விதித்துள்ளது.

அத்துடன்  ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து அதனை 05 வருடத்திற்கு மன்று ஒத்திவைத்துள்ளது.