3 மாதங்களில் சுமார் 75 ஆயிரம் பேர் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு பயணம்

8 0

2024ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 74,499 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நேற்று (04) தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளுக்கு வேலை பெற்று சென்றவர்கள் தொடர்பில் பணியகம் மேலும் கூறியதாவது :

வேலைவாய்ப்பு பெற்று வெளிநாடுகளுக்கு சென்ற 74,499 இலங்கையர்களில் 46 வீதமானோர் பெண்கள் ஆவர்.

கடந்த 2023இல் இதே காலகட்டத்தில் 76,025 இலங்கை பணியாளர்கள் வெளிநாடுகளுக்கு சென்றனர். அந்த எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் வெளிநாடுகளுக்கு சென்றவர்களின் எண்ணிக்கையில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இலங்கையர்கள் பெரும்பாலும் தென்கொரியா, இஸ்ரேல், ஜப்பான் போன்ற நாடுகளில் வேலைவாய்ப்பு பெற விரும்புகின்றனர்.

அதனடிப்படையில், 2024ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 17,793 பேர் குவைத்துக்கும், 2,374 பேர் தென் கொரியாவுக்கும், 2,114 பேர் இஸ்ரேலுக்கும், 1,899 பேர் ருமேனியாவுக்கும், 1,947 பேர் ஜப்பானுக்கும் சென்றுள்ளனர்.

அத்துடன், இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் 963.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.

மத்திய வங்கியின் தரவுகளின் பிரகாரம், வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கை தொழிலாளர்கள் இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் அதிக அந்நிய செலாவணியை ஈட்டிக் கொடுத்துள்ளனர்.

அத்துடன், ஆடை உற்பத்தித்துறை மூலம் 803.4 மில்லியன் டொலர், சுற்றுலாத்துறை மூலம்  687.5 மில்லியன் டொலர், தேயிலை உற்பத்தித்துறை மூலம் 229.9 மில்லியன் டொலர், பெற்றோலியப் பொருட்கள் ஏற்றுமதியில் 177.3 மில்லியன் டொலர், இறப்பர் தயாரிப்பு ஏற்றுமதியில் 166.4 மில்லியன் டொலர், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஏற்றுமதியில் 102 மில்லியன் டொலர் என அந்நிய செலாவணி வருவாய்களும் சிறந்த முறையில் பெறப்பட்டுள்ளதாக மத்திய வங்கித் தரவுகளினூடாக தெரியவருகிறது.