மலையக மக்களின் பல்துறை பின்னடைவு குறித்து ஆராயும் செயற்திட்டம் ஆரம்பம்

26 0

நாட்டின் ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடுகையில் பல்வேறு துறைகளிலும் மலையக சமூகம் பின்தங்கிய நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பேராசிரியர் ரி.தனராஜ், மலையக மக்களுக்குரிய உரிமைகள் மற்றும் வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படாமைக்கான காரணங்கள் பற்றியும் அவர்களை தேசிய ரீதியில் மேம்படுத்துவதற்கு முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ஆராய்ந்து, உண்மைத்தகவல்களைக் கண்டறிந்து, அறிக்கை சமர்ப்பிப்பதற்கான செயற்திட்டமொன்றை ஆணைக்குழு முன்னெடுத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தவிசாளர் மற்றும் ஆணையாளர்கள் கடந்த ஆண்டு தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்துத் தெளிவுபடுத்தும் நோக்கிலான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று புதன்கிழமை கொழும்பிலுள்ள இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெற்றது. இச்சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கல்வி மற்றும் பயிற்சி வழங்கல் பிரிவுக்கு பொறுப்பாக செயற்பட்டுவரும் பேராசிரியர் ரி.தனராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதன்படி நாட்டின் ஏனைய சமூகங்களுக்கும், மலையக சமூகத்துக்கும் இடையில் பாரிய இடைவெளி காணப்படுவதாக விசனம் வெளியிட்ட அவர், கல்வித்துறையைப் பொறுத்தமட்டில் தேசிய ரீதியில் 97 சதவீதமாகக் காணப்படும் எழுத்தறிவு வீதம், மலையகத்தில் 85 சதவீதமாகக் காணப்படுவதாகவும், வறுமை மட்டமானது தேசிய ரீதியில் 4 சதவீதமாக உள்ளபோதிலும், மலையகத்தில் 9 சதவீதம் எனும் உயர்மட்டத்தில் பதிவாகியிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் மாணவர்களின் எண்ணிக்கை தேசிய ரீதியில் 6 சதவீதமாகக் காணப்படுகின்ற போதிலும், மலையகத்தில் வெறுமனே ஒரு சதவீதமாக மாத்திரமே இருப்பதாகத் தெரிவித்த அவர், இந்த நிலைக்கான காரணம் என்னவென்று கேள்வி எழுப்பினார்.

மேலும் மலையக மக்களை அவ்வாறு அதே நிலையில் வைத்திருப்பதற்குத் தாம் விரும்பவில்லை எனக் குறிப்பிட்ட பேராசிரியர் தனராஜ், எனவே அவர்களது பின்னடைவுக்கான காரணங்கள், அவர்களது உரிமைகள் மற்றும் அவர்களுக்கு அவசியமான வசதிகள் என்பன பற்றிய உண்மைத்தகவல்களைத் திரட்டி, அவற்றை உள்ளடக்கிய அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பதற்கு உத்தேசித்திருப்பதாகக் குறிப்பிட்டார். அதற்கமைய உண்மைத்தகவல்களைத் திரட்டும் செயற்திட்டத்தைத் தாம் முன்னெடுத்துவருதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை தற்போது நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக பாடசாலைக்கல்வி செயற்பாடுகளிலிருந்து மாணவர்கள் இடைவிலகும் வீதம் சடுதியாக அதிகரித்திருப்பதாகவும், இதுபற்றி ஆராயவேண்டிய பொறுப்பு தமது ஆணைக்குழுவுக்கு இருப்பதாகவும் குறிப்பிட்ட தனராஜ், அதற்குரிய நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என உறுதியளித்தார்.