சிறையில் மனைவிக்கு விஷம் கொடுத்து கொல்ல சதி- இம்ரான்கான் குற்றச்சாட்டு

26 0

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஊழல் வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளார்.அதே போல் அவரது மனைவியும் புஷ்ரா பீபி, தோஷகானா ஊழல் வழக்கு மற்றும் முஸ்லிம் திருமண சட்டத்தை மீறியது ஆகிய இரண்டு வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இம்ரான்கானின் வீடு கிளை சிறையாக மாற்றப்பட்டு, அதில் புஷ்ரா பீபி அடைக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் சிறையில் தனது மனைவிக்கு விஷம் கொடுத்து கொல்ல முயற்சி நடந்ததாக இம்ரான்கான் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.தோஷகானா ஊழல் வழக்கு தொடர்பான விசாரணையில் இம்ரான்கான் கூறும்போது, அடியாலா கிளை சிறையில் தனது மனைவி புஷ்ரா பீபிக்கு விஷம் கொடுத்து கொல்ல முயற்சிக்கப்பட்டுள்ளது. இதற்கான அடையாளங்கள் அவரது தோலில் இருந்தது.

நாக்கில் விஷத்தின் பக்க விளைவு ஏற்பட்டுள்ளது.இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். எனது மனைவிக்கு ஏதும் விபரீதம் நேர்ந்தால் அதற்கு பாகிஸ்தான் ராணுவ தளபதியே பொறுப்பேற்க வேண்டும். மனைவியை பரிசோதித்த டாக்டர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.புஷ்ராவுக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்றது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.இதையடுத்து புஷ்ரா பீபியின் மருத்துவப் பரிசோதனை குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இம்ரான்கானுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

இதற்கிடையே புஷ்ரா பீபி கூறும்போது, கழிவறையை சுத்தப்படுத்த பயன்படுத்தப்படும் திரவத்தை எனக்கு உணவில் கலந்து கொடுத்துள்ளனர். அதன்பின் உடல்நிலை மோசமடைந்தது. என் கண்கள் வீங்குகின்றன. மார்பு, வயிற்றில் வலியை உணர்கிறேன், உணவு , தண்ணீரும் கசப்பாக இருக்கிறது. முன்பு தேனில் சில சந்தேகத்திற்கிடமான பொருட்கள் கலந்திருந்தன.

தற்போது கழிப்பறையை சுத்தப்படுத்தும் கிளீனர் எனது உணவில் கலக்கப்பட்டுள்ளது என்றார்.