திமுக – காங். கூட்டணியை பிரிக்க கச்சத்தீவை கையிலெடுக்கும் பாஜக: கி.வீரமணி

116 0

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தென்காசியில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: மோடி தலைமையிலான பாஜக அரசு மீண்டும் அமைந்தால், ஜனநாயகத்தின் கடைசி தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்போம் என்றும், விலைவாசியை குறைப்போம் என்றும் பல்வேறு வாக்குறுதிகளைக் கூறினர். ஆனால், அவற்றை பாஜக நிறைவேற்றவில்லை.

திமுக- காங்கிரஸ் கூட்டணியை பிரிக்க வேண்டும் என்பதற்காக கச்சத்தீவு தொடர்பாக தவறான பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். உண்மைக்கு மாறான விஷயத்தை கூறி வருகின்றனர். கச்சத்தீவு விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் திமுக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. கண்டன கூட்டத்தையும் நடத்தியது. அதில் கலந்துகொண்டவர்களில் நானும் உண்டு.

இந்திய மீனவர்கள் தொடர்ந்து இலங்கை அரசால் கைது செய்யப்படுகிறார்கள். அவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுகிறது. கச்சத்தீவை மீட்க பாஜக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி ஹீரோவாக இல்லை, ஜீரோவாகத்தான் இருக்கிறார்.

பிரதமர் தமிழகத்துக்கு வரும்போதெல்லாம் திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறுகிறார். இப்போது புதிய விவகாரத்தை கூறி திசை திருப்புகின்றனர். எப்படியாவது நோட்டாவை தாண்ட வேண்டும் என்பதுதான் அவர்களது எண்ணம். இவ்வாறு அவர் கூறினார்.