உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தவறியுள்ளது

54 0

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடிப்படையாக்கொண்டு தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷ தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளை கண்டறிவதாக வாக்குறுதியளித்த போதும் அது நிறைவேற்றப்படவில்லை. அதேநேரம் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அந்த விசாரணை இடம்பெறுகிறதா என்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும். அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 5 வருடமாகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முடியாமல் போயிருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (01) நிலையியற் கட்டளை 27 2 இன் கீழ் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 5 வருடங்களை நெருங்கியுள்ளது. என்றாலும் இந்த தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை, மலல்கொட குழு அறிக்கை மற்றும் பாராளுமன்ற தெரிவுக்குழு ஆகியவற்றின் ஊடாக சமப்பிக்கட்டுள்ள பரிந்துரைகளை செயற்படுத்தவோ அல்லது பரிந்துரைகளை பூரணமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் அதனை இதுவரை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த அறிக்கைகளின் சில பகுதிகள் இன்னும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மறைக்கப்பட்டிருக்கின்றன.

தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தொடர்பில்  உறுதிப்படுத்தாமல் பல்வேறு பெயர்களை தெரிவித்த காரணமாக தற்போதும் பல்வேறு நபர்களால் தாக்குதல் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதனால் தேசிய முக்கியத்துவம் கருதி பின்வரும் கேள்விகளுக்கு அரசாங்கத்திடம் பதிலை எதிர்பார்க்கிறேன்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் எந்தளவு விசாரணைகளை நடத்தி இருக்கிறது.அதன் மூலம் எந்தளவு பரிந்துரைகள் முன்வைகப்பட்டிருக்கின்றன. அந்த பரிந்துரைகளை செயற்படுத்த முடியாமல் இருப்பதற்கான காரணம் என்ன? இந்த விசாரணை அறிக்கைகளை பொது மக்களுக்கு ஏன் வெளிப்படுத்த முடியாது? இந்த தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்வதாக ஜனாதிபதி கடந்த வருடம் தெரிவித்திருந்தார். அது இடம்பெற்றதா? அதன் நிலை என்ன என்பதை எமக்கு தெரிவிக்க வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் இடம்பெற்ற வவுனதீவு பொலிஸில் 2 அதிகாரிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில்  அரச புலனாய்வு பிரிவி மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவால்  குற்றப்புலனாய்வு பிரிவை ஏமாற்றியுள்ளதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறதா? அவ்வாறு இல்லாவிட்டால் அது தொடர்பில் மீண்டும் பக்கச்சார்ப்பற்ற விசாரணை ஒன்றை நடத்த முடியாதா?

மேலும் சஹ்ரானுடன் அதிக தடவைகள் தொலைபேசியில் கலந்துரையாடிய நபர் புலனாய்வு அதிகாரி என எப்.பி.ஐ. ஊடாக வழங்கிய ஐ.பி. முகவரி மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அது தொடர்பில் குறித்த புலாளாய்வு அதிகாரியிடம் விசாரணை நடத்த குற்றப்புலனாய்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்திருக்கிறதா? அவ்வாறு இல்லை என்றால் அதற்கான காரணம் என்ன? அந்த விசாரணையை நடத்த பாரியளவில் தடைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

தெஹிவலை பிரதேசத்தில் குண்டை வெடிக்கச்செய்து தற்கொலை செய்துகொண்ட ஜெமீலின் மனைவியின் வீட்டுக்கு, குண்டு வெடிப்பதற்கு முன்னரே புலனாய்வு அதிகாரிகள் சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்த சம்பவம் தொடர்பில் புலனாய்வு பிரிவு முன்கூட்டியே அறிந்திருக்கவேண்டும். உயிரித்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான தகவல்களை புலனாய்வு பிரிவினர் அறிந்திருந்தார்களா இல்லையா என்ற கேள்விக்கு எமக்கு பதில் தேவை. குண்டு வெடிப்பதற்கு முன்னர் புலனாய்வு பிரிவினர் குண்டுதாரியின் மனைவியின்  வீட்டுக்கு எந்த அடிப்படையில்  செள்றார்கள்? அது தொடர்பில் விசாரணை நடத்தி இரு்கிறதா?அவ்வாறு இல்லை என்றாரல் அது ஏன்?

புலனாய்வு அதிகாரி மஹில்டூலினால் ஜெமீல் தொடர்பில் அவரின் நண்பர் வெளிப்படுத்தி இருக்கும் விடயங்கள் தொடர்பில் அரச மற்றும் இராணுவ புலனாய்வுக்கு தகவல் வழங்கி இருப்பதாக தெரியவருகிறது. அவ்வாறு இருந்தும் அது தொடர்பில் விசாரணை நடத்தாமல் இருப்பதற்கு காரணம் என்ன? சாய்ந்தமரு வெடிப்பில் மரணித்தவர்களின் டீ.என்.ஏ. உடன் சாரா ஜெஸ்மினின் டீ.என்.ஏ. முதல் இரண்டு தடவைகளும் பொருத்தம் இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் மூன்றாவது தடவை எவ்வாறு அது பொருந்தியது?

அதேபோன்று சஹ்ரான் தொடர்ந்து தொலைபேசியல் தொடர்புகளை மேற்கொண்டுவந்த அபுஹிந் யார் என்பதை விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறதா? உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான நவ்பர் மெளலவி ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரிக்கப்படவில்லை என்றே தெரியவருகிறது. அவ்வாறு விசாரிக்கப்பட்டிருந்தால், அவரால் தெரிவிக்கப்பட்ட சாட்சியங்களை இந்த சபைக்கு சமர்ப்பிக்க முடியாதா?

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடிப்படையாக்கொண்டு தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ். தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளை கண்டறிவதாக வாக்குறுதியளித்த போதும் அது நிறைவேற்றப்படவில்லை. ஜனாதிபதியான பின்னர் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வைச் சேர்ந்த 31க்கும் மேற்பட்ட அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கும் வெளிநாட்டு பயணத்துக்கு தடை செய்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளார். தாக்குதலின் சூத்திரதாரிகளை கண்டுபிடிப்பதாக கர்தினாலுக்கு வாக்குறு அளித்தே ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றார். அதற்கே அவருக்கும் மக்கள் ஆணை கிடைக்கப்பெற்றது. ஆனால் ஜனாதிபதியானதும் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் 31பேரை இடமாற்றம் செய்தார்.

நெடுஞ்சாலையில் கெலனிகம வெளியேறும் நுழைவாயிலுக்கு அருகில் நிறுத்தப்பட்ட லொறியை விடுவிப்பதற்கு உத்தரவிட்ட பொலிஸ் அதிகாரி யார்? உயிர்த்த ஞாயிறி தாக்குதல் தொடர்பில் இந்தியன் கெளண்டபாட் முகவர் நிறுவனத்தினால் அனுப்பப்பட்ட வடசப் அறிவிப்பு, புலனாய்வு பிரிவிக்கு யாரால் வழங்கப்பட்டிருக்கிறது.அந்த அறிவிப்புகள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளதாக தெரியவருவதால் அது தொடர்பில் விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறதா? இல்லை என்றால் அது ஏன்.

நாட்டுக்குள் இவ்வாறான தாக்குதல் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக  இந்திய புலனாய்வு பிரிவிவால் பல தடவைகள் எமது புலனாய்வு பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன, அவ்வாறு அறிவிக்கப்பட்ட திகதி எப்போது? ஹாதியா என்ற நபரை விசாரணை மேற்கொண்ட ஜயசிங்க என்ற அதிகாரி  திடீரென மரணித்திருப்பது தொடர்பில் அரசாங்கம் விசாரணை மேற்கொண்டிருக்கிறதா?இதுதொடர்பாக விசேட விசாரணை ஒன்றை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கைஎடுத்திருக்கிறதா?

மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கும் நபர்கள் யார்.? அவர்களில் நஷ்டயீடு வழங்கவேண்டும் என உத்தரவிடப்பட்டிருப்பவர்கள் யார். அதில் எந்தளவு தொகை இதுவரை செலுத்தப்பட்டிருக்கிறது.

இந்த தாக்குதல் தொடர்பில் பல்வேறு நபர்களுக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவு வழங்கி இருக்கிறது. அவற்றை செயற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறதா? உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக செயல்பட்டவர்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி தெளிவான அறிவிப்பு மூலம் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், இது குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வளவு பெரிய குற்றத்திற்கு காரணமான நபர்கள் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்தாததற்கான காரணங்களை  அறிய விரும்புகிறோம். தாக்குதல் சூத்திரதாரிகளை வெளிப்படுத்தாமல் இருந்தமைக்கு காரணம் என்ன என்பதை அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும் என்றார்.