ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தின்போது கூட்டணியின் புதிய செயலாளர் நியமனம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
கூட்டணியின் பொதுச்செயலாளராக கடமையாற்றி வந்திருந்த ஆர்.ராகவன் இயற்கை எய்தியதையடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதே மேற்படி கூட்டத்தின் பிரதான நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, குறித்த கூட்டத்தின்போது, ஜனநாயக கூட்டணியை மாவட்டம் தோறும் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளது.
விசேடமாக கூட்டணியின் கிளைகள் மறுசீரமைப்பு, புதிய அங்கத்துவம் சம்பந்தமான விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படவுள்ளன.
இதேநேரம், ஏலவே ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் கொள்கையளவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றை எடுப்பதற்கும் முயற்சிக்கப்படவுள்ளதாக அக்கூட்டணியின் உயர்மட்டத்தினர் தெரிவித்துள்ளனர்.