அண்மையில் கடும் சர்ச்சைக்கு உள்ளாகியிருந்த தண்டனைச்சட்டக்கோவையின் 363 மற்றும் 364 ஆம் பிரிவுகளைத் திருத்துவதற்கான சட்ட மசோதா தொடர்பில் தமது அவதானிப்புக்கள் மற்றும் பரிந்துரைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளது.
தண்டனைச்சட்டக்கோவையின் 363 மற்றும் 364 ஆம் பிரிவுகளைத் திருத்துவதற்கான சட்ட மசோதா குறித்து பல்வேறு தரப்பினராலும் கடும் எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டதையடுத்து, அச்சட்டமூலம் தொடர்பில் ஆலோசனை கலந்துரையாடல்களை முன்னெடுக்கவிருப்பதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
இச்சட்டமூலமானது 18 வயதை அடையாத ஒருவர் பாலியல் உறவில் ஈடுபடுவதற்குரிய சம்மதத்தை அளிப்பதற்கான தகைமை வயதெல்லையை 16 இலிருந்து 14 ஆகக் குறைப்பதற்கு முன்மொழிகின்றது. அதேபோன்று பாலியல் வன்புணர்வில் ஈடுபடும் நபர் 22 வயதுக்குக் குறைந்தவராக (நடைமுறை சட்டத்தின்படி 18 வயதுக்குக் குறைந்தவர்) இருப்பின் அவர் தண்டனையிலிருந்து விலக்கீடு பெறக்கூடிய வாய்ப்பையும் இத்திருத்தம் வழங்குகின்றது. அதன்படி இச்சட்டமூலம் தொடர்பில் தமது அவதானிப்புக்களையும், பரிந்துரைகளையும் உள்ளடக்கி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
தெற்காசியப்பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகள் பாலியல் உறவில் ஈடுபடுவதற்குரிய சம்மதத்தை அளிப்பதற்கான வயதெல்லையை அதிகரிப்பதன் மூலம் சிறுவர்களை பாலியல் அத்துமீறல்களிலிருந்து பாதுகாப்பதற்கு முற்படுவதை அவதானிக்கமுடிகின்றது. குறிப்பாக இந்தியாவில் 2012 ஆம் ஆண்டு பாலியல் குற்றங்களிலிருந்து சிறுவர்களைப் பாதுகாப்பதற்கான சட்டத்தின் மூலம் இந்திய தண்டனைச்சட்டக்கோவையின் 375 ஆம் பிரிவின்கீழ் பாலியல் உறவுக்கு சம்மதம் அளிப்பதற்கான வயதெல்லை 16 இலிருந்து 18 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
குறிப்பாக பாலியல் உறவுக்கான வாய்ப்பு மற்றும் வன்புணர்வுக் குற்றத்துக்கான தண்டனை ஆகியவற்றை நிர்ணயிக்கும்போது சிறுவர்களின் நலனுக்கே அரசாங்கம் முன்னுரிமை அளிக்கவேண்டுமென பொதுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய தண்டனைச்சட்டக்கோவையின் 364(2) ஆம் பிரிவின்கீழ் சுட்டிக்காட்டப்படும் குற்றவாளி தொடர்பான வயதெல்லையை ’18 வயதுக்குக்கீழ்’ என்று பேணவேண்டும் எனவும், ’22 வயதுக்குக்கீழ்’ என அதிகரிக்கக்கூடாது எனவும் நாம் பரிந்துரைக்கின்றோம்.
மேலும் குற்றவாளி மற்றும் பாதிக்கப்பட்ட நபருக்கு இடையில் திருமண உறவு இருப்பினும், அதனைக் கருத்திற்கொள்ளாது ‘வன்புணர்வை’ குற்றமாக்குவதற்குரிய வாய்ப்பை உருவாக்கும்படி நாம் அரசாங்கத்தை ஊக்குவிக்கின்றோம் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.