கோவையில் இன்று ஒரே நாளில் கனிமொழி – பிரேமலதா போட்டி பிரசாரம்

19 0

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டு நேற்று பரிசீலனையும் முடிந்து விட்டது. இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வருகிற 30-ந்தேதி வெளியிடப்படுகிறது.கோவை, பொள்ளாச்சி, நீலகிரி தொகுதியில் 4 முனை போட்டி நிலவுகிறது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., நாம்தமிழர் கட்சி ஆகிய 4 கட்சி வேட்பாளர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். இதனால் 3 தொகுதிகளிலும் தேர்தல் களம் பரபரப்புடன் காணப்படுகிறது.

குறிப்பாக கோவை தொகுதியில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால் இந்த தொகுதி எதிர்பார்ப்பு மிக்க தொகுதியாக உள்ளது. இங்கும் போட்டி கடுமையாக உள்ளது.பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி ஏற்கனவே இங்கு 2 முறை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். கோவை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்லடத்தில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் கோவை வந்து ரோடுஷோவில் பங்கேற்று வாக்கு சேகரித்தார்.

அவரை தொடர்ந்து வேட்பாளரும், மாநில தலைவருமான அண்ணாமலையும் கோவை வந்து ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.இதேபோல தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் விரைவில் இந்த தொகுதிகளுக்கு வர உள்ளனர். அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சீமான் ஆகியோர் பிரசாரம் செய்ய உள்ளனர்.

இந்நிலையில் கோவை, பொள்ளாச்சி தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று பிரசாரம் மேற்கொண்டார். காலையில் துடியலூர், சிங்காநல்லூர், சூலூர் பகுதியில் திறந்து வேனில் நின்றபடி பேசி வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து மாலையில் அவர் மலுமிச்சம்பட்டி, நெகமம், மடத்துக்குளம் பகுதியில் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரிக்கிறார்.

இதேபோல தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சிங்காநல்லூரில் கோவை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பேசுகிறார். சிங்காநல்லூர் பஸ்நிலையம் அருகே திரண்டு நின்ற பொதுமக்கள் மத்தியில் திறந்த வேனில் நின்றபடி அவர் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்கிறார். தொடர்ந்து நீலகிரியிலும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

இன்று மாலை அவர் திருப்பூரில் பிரசாரம் மேற்கொள்கிறார். தொடர்ந்து நாளை அவர் ஈரோட்டில் பிரசாரம் செய்கிறார்.கோவையில் இன்று ஒரே நாளில் கனிமொழி எம்.பி.யும், பிரேமலதா விஜயகாந்த்தும் பிரசாரம் மேற்கொண்டனர். தொடர்ந்து வரும் நாட்களில் தலைவர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்கும்