முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

17 0

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார்கட்டு குளப்பகுதியில் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன், சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த இளைஞன் ஒருவரை நேற்று வியாழக்கிழமை (28)  கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் இரவு 8 மணியளவில் இடம்பெற்ற கைது சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

புதுக்குடியிருப்பு உடையார்கட்டு குளத்தின் அருகிலுள்ள காட்டு பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி இடம்பெற்று வருவதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் கொஸ்தாபிள் பிரதீபனுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்ட புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய மது ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி  பொலிஸ் சார்ஜன் (70537) குணவர்த்தன மற்றும் பொலிஸ் கொஸ்தாபல்களான (72485) ஜெயசூரிய, (74996) பணாவர, (88509) பிரதீபன் ஆகிய குறித்த பொலிஸ் குழுவினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

கசிப்பு 56,000 மில்லி லீற்றர், 3 பரல்களுக்குள் 75,000 மில்லி மீற்றர் எரிந்த கோடாவும், கசிப்பு உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் உபகரணங்களுடனும் உடையார்கட்டு தெற்கு மூங்கிலாறு பகுதியினைச் சேர்ந்த 23 வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்டுவரும் மேலதிக விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.