சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ள விடயம்

26 0

இவ்வாண்டு இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலைக் கண்காணிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ள சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு தேர்தல்கள் ஆணைக்குழு, ஜனாதிபதித் தேர்தலை உரிய காலப்பகுதியில் நடாத்துவதற்கு அவசியமான போதிய வளங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு என்பது தேர்தல்களைக் கண்காணித்தல், இயலுமையைக் கட்டியெழுப்பல், விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ளல் ஆகியவற்றின் மூலம் ‘ஜனநாயகத் தேர்தலை’ பாதுகாப்பதையும், மேம்படுத்துவதையும் இலக்காகக் கொண்டு பணியாற்றிவரும் பிராந்திய அமைப்பாகும்.

ஜனநாயகத் தேர்தல்களின் சர்வதேச கோட்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2001ஆம் ஆண்டு முதல் இலங்கையில் இடம்பெற்ற 12 தேர்தல்களை இவ்வமைப்பு கண்காணித்திருக்கிறது.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதிக்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தல் நடாத்தப்பட வேண்டும். அதற்கமைய இலங்கையில் அனைத்து தரப்பினரையும் உள்வாங்கி, நியாயமாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் சர்வதேச தராதரங்களுக்கு ஏற்ப ஜனநாயக ரீதியிலான தேர்தல் நடைபெறுவதை உறுதிசெய்வதற்குத் தாம் எதிர்பார்த்திருப்பதாக சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு தெரிவித்துள்ளது.

‘நாம் இதற்கு முன்னதாக இலங்கையுடன் இணைந்து பணியாற்றிய சந்தர்ப்பங்களில் தேர்தல் பிரசார செலவினங்களை ஒழுங்குபடுத்தல், வெறுப்புணர்வுப் பேச்சு மற்றும் போலித்தகவல் பரவலை முறியடித்தல், புலம்பெயர் தொழிலாளர்களின் வாக்களிப்பதற்கான உரிமையை உறுதிப்படுத்தல் என்பன உள்ளடங்கலாக நாட்டில் மேற்கொள்ளப்படவேண்டிய முக்கிய தேர்தல் மறுசீரமைப்புக்களை சுட்டிக்காட்டியிருந்தோம்’ எனவும் அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மேலும், தேர்தல் பிரசார செலவினங்களை ஒழுங்குபடுத்தும் வகையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத்தைத் தாம் பெரிதும் வரவேற்பதாகவும், இது அனைத்து வேட்பாளர்களும் சமமான நிலையிலிருந்து போட்டியிடுவதற்கு வாய்ப்பளிக்கும் எனவும் சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது இச்சட்டங்கள் உரியவாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்பதைக் கண்காணிப்பதற்கான கடப்பாட்டைத் தாம் கொண்டிருப்பதாகவும் அவ்வமைப்பு அறிவித்துள்ளது.

அத்தோடு உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை நடாத்துவதில் நிலவும் தொடர் தாமதம், உரிய காலப்பகுதியில் தேர்தல்களை நடாத்துவதில் இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாடு குறித்து சந்தேகத்தை தோற்றுவிப்பதாக சுட்டிக்காட்டியுள்ள சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு, ஜனாதிபதித் தேர்தலை உரிய காலப்பகுதியில் நடாத்துவதற்கு அவசியமான போதிய வளங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.