ஹரக்கட்டாவின் கோரிக்கை தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

19 0

தங்காலை பழைய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான “ ஹரக் கட்டா ” என்பவர் கோரிய வசதிகளை வழங்க முடியுமா என்பது தொடர்பில் ஆராய்ந்து ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி நீதிமன்றில் தெரிவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (26) உத்தரவிட்டுள்ளது.

“ ஹரக் கட்டா ” வினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் விசாரணை செய்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

“ ஹரக்கட்டா ” சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் மூலமாகவே இந்த கோரிக்கை நீதிமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சட்டதரணிகளை சந்தித்து ஆலோசனைகளை வழங்குவதற்கு ஒரு சட்டதரணிக்கு குறைந்தது 15 நிமிடத்தை ஒரு மணித்தியாலமாக நீடித்து வழங்க வேண்டும் எனவும் சந்தேக நபர் வைக்கப்பட்டுள்ள இடத்தில் பாதுகாப்பு கமெரா உள்ளதா என்பது தொடர்பிலும் அவதானிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும்,  குற்றவாளியை தங்காலை வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவரிடம் அழைத்து செல்லுமாறும், அவரது குடும்பத்தை சந்திக்கும் நேரத்தை ஒரு மணித்தியாலமாக அதிகரிக்குமாறும் அவர் தனது பிள்ளைகளுடன் தொலைபேசியில் உரையாட வசதிகள் வழங்க உத்தரவிடுமாறும் அந்த கோரிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேலும், வெளியில் இருந்து உணவுகளை பெற்றுக்கொள்வதற்கும்  அனுமதி வழங்குமாறும் கோரிக்கையில் தெரிவிக்கப்படு்டுள்ளது.