பதற்றம் வேண்டாம்; தன்னம்பிக்கையோடு தேர்வெழுதுங்கள்: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுரை

16 0

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று (மார்ச் 26) தொடங்கும் நிலையில் அத்தேர்வினை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சமூகவலைதளப் பக்கத்தில், “10’ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதவுள்ள என் அன்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பு வாழ்த்துகள்.

நீங்கள் பயின்ற ஒரு அறைதான், நண்பர்களோடும், ஆசிரியர்களோடும் மகிழ்ச்சியாக உரையாடிய ஒரு அறைதான் உங்களுக்கான தேர்வு அறை.

உங்களின் ஆசிரியர்கள்தான் தேர்வறை கண்காணிப்பாளர்களாக இருப்பார்கள்.

உங்களின் நண்பர்கள்தான் உங்களைச் சுற்றி அமர்ந்து தேர்வு எழுதுவார்கள். அது உங்களின் இடம்.

ஆகவே எதை நினைத்தும் பதற்றம் அடையாதீர்கள். பயம் கொள்ளாதீர்கள்.

தன்னம்பிக்கையோடு தேர்வு எழுதுங்கள். அதுதான் உங்களுக்கான வெற்றியைத் தேடித் தரும்.

மகிழ்ச்சியோடு சென்று வாருங்கள். வாழ்த்துகள்.” எனப் பதிவிட்டுள்ளார்.

ஏப்ரல் 8 வரை நடைபெறும் தேர்வு: 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது.முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. 12,616 பள்ளிகளில் இருந்து 9.10 லட்சம் மாணவ, மாணவிகள், 28,827 தனி தேர்வர்கள், 235 சிறை கைதிகள் உட்பட மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். இதையொட்டி, மாநிலம் முழுவதும் 4,107 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 48,700 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். முறைகேடுகளை தடுக்க 4,591 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர், வருவாய் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.