ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்கள் யார் என்று தெரிந்தால் மைத்திரி உடன் வெளிப்படுத்த வேண்டும்

14 0

ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்கள் யார் என்று தெரிந்தால், நீதிமன்ற உத்தரவுக்கு காத்திருக்காமல் அவர்கள் யார் என்பதை மைத்திரிபால சிறிசேன நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபையின் நிதி  ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்ட கண்டி வித்யார்த்த வித்தியாலய மைதானத்தை சனிக்கிழமை (23) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்தினால் நல்லது என்றும், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும் கட்சிக்கே அதிக அனுகூலங்கள் கிடைக்கும் என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி   ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் ? என்பதை சரியான நேரத்தில் வெளிப்படுத்துவோம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கோப் குழுவின் தலைவராக ரோஹித அபேகுணவர்தனவை நியமிப்பது தொடர்பில் ஒவ்வொருவரும் வெளியிடும் அறிக்கைகளை நிறுத்த முடியாது, ஆனால் தலைவர் என்பவர்  பாராளுமன்ற உறுப்பினராக மக்களால் நியமிக்கப்பட்டுள்ளார் அன்றி வெளியொருவர் அல்ல. என்றும் கூறினார்.

பொது ஒழுங்கைப் பேணுவதற்கான பொறுப்புக்காக ஆயுதப் படைகளை அழைக்க ஜனாதிபதிக்கு உரிமை உண்டு அதிக பாதுகாப்புக்காகவே இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தாம் கருதுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, வித்யார்த்த வித்தியாலய அதிபர் எம்.ஆர்.பி.மாயாதுன்னே, வித்தியார்த்த வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் ரஞ்சித் வீரசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.