பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் முட்டாள்தனமான தீர்மானத்தால் விவசாயத்துறை வீழ்ச்சியடைந்தது

23 0

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் முட்டாள்தனமான தீர்மானத்தினால் தேசிய விவசாயத்துறை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீண்டு விட்டோம் என பொய்யுரைக்காமல் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்ய உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என  ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்ற நெல் அறுவடையை விற்பனை செய்தல் உள்ளிட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் ஏனைய பிரச்சினைகள் பற்றிய சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்கப்படாமல் இருப்பது விவசாயிகள் எதிர்க்கொள்ளும் பிராதான பிரச்சினையாக காணப்படுகிறது.பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் விவசாயிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் எடுத்த முட்டாள்தனமான தீர்மானத்தினால் நாட்டின் விவசாயத்துறை முழுமையாக வீழ்ச்சியடைந்தது.

இரசாயன பசளைக்கு பதிலாக சேதளைத்திட்டத்தை அமுல்படுத்தியதால் விவசாயிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டார்கள்.

உலகில் எந்த நாடுகளும் எடுக்காத தீர்மானத்தையே ராஜபக்ஷ அரசாங்கம் செயற்படுத்தியதால் விவசாயத்துறை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

2019 முதல்   2022  வரையான காலப்பகுதியில் சிறு மற்றும் பெரும்போக விளைச்சல்கள் வீழ்ச்சியடைந்தன.2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பெரும்போகத்தில் 23 ஆயிரம் மெற்றிக் தொன், சிறுபோகத்தில் 18 ஆயிரம் மெற்றிக் தொன்  என்ற அடிப்படையில் நெல் விளைச்சல் கிடைக்கப் பெற்றுள்ளது.

நெல்லுக்கான உத்தரவாத விலை இல்லாத காரணத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.விவசாயிகளின் நலனை கருத்திற் கொண்டு எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.விவசாயிகளின் செலவுக்கு ஏற்றாட் போல் நெல் கொள்வனவு செய்யப்பட வேண்டும்.ஆகவே நெல் கொள்வனவுக்கு அரசாங்கம் விசேட பொறிமுறைகளை செயற்படுத்த வேண்டும்.

நெல் அறுவடை செய்யும் காலத்தில் அரிசி இறக்குமதி செய்யப்படுவதில்லை.ஆனால் இந்த ஆண்டு மாத்திரம் 30 ஆயிரம் மெற்றிக்தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.தேசிய உற்பத்திகளை நெருக்கடிக்குள்ளாக்கி மொத்த இறக்குமதியாளர்கள் பயனடையும் வகையில் வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு விட்டோம் என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது.ஆனால் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை. ஆகவே பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்துள்ளோம் என்று பொய்யுரைக்காமல், நெல்லை கொள்வனவு  செய்ய நிதி ஒதுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.