உயிர்த்த ஞாயிறுதாக்குதல்சூத்திரதாரிகள் – உண்மையை வெளியிட தயார் என்கின்றார் மைத்திரி

21 0

உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்களை யார் நடத்தியது என்ற உண்மையை இன்னமும் எவரும் கூறவில்லை. ஆனால் அத்தாக்குதல்களை நடத்தியது யார் என்பது எனக்குத் தெரியும். அதனை வெளிப்படுத்துமாறு நீதிமன்றம் எனக்கு உத்தரவு பிறப்பித்தால், நான் அதுபற்றி விபரங்களை வெளியிடுவேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

‘தற்போது நாடும், நாட்டுமக்களும் மிகமோசமான நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்றனர். இதிலிருந்து மீட்சியடையவேண்டுமெனில் ஜனாதிபதித்தேர்தலும், பொதுத்தேர்தலும் உரிய காலப்பகுதியில் நடத்தப்படவேண்டும். அதனையடுத்து பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை முழுமையாக மீட்டெடுப்பதுடன், பொதுமக்கள் முகங்கொடுத்திருக்கும் பிரச்சினைகளுக்கு உரியவாறான தீர்வை வழங்கவேண்டிய பொறுப்பை புதிய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டும்’ என அவர் இதன்போது வலியுறுத்தினார்.

அதுமாத்திரமன்றி உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்களை யார் நடத்தியது என்ற உண்மையை இன்னமும் எவரும் கூறவில்லை எனவும், ஆனால் அத்தாக்குதல்களை நடத்தியது யார் என்பது தனக்குத் தெரியும் எனவும் குறிப்பிட்ட அவர், அதனை வெளிப்படுத்துமாறு நீதிமன்றம் தனக்கு உத்தரவு பிறப்பித்தால் அவ்வுண்மையை வெளியிடத்தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

அதேவேளை அத்தகவலின் இரகசியத்தன்மையைப் பேணும் பொறுப்பு முற்றுமுழுதாக நீதிபதிகளுக்கே இருப்பதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.