சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிப்பு !

25 0

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் எதிர்கட்சிகளினால் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு  எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப்  பிரேரணை  42 மேலதிக  வாக்குகளினால்  தோற்கடிக்கப்பட்டது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு  எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப்  பிரேரணைக்கு ஆதரவாக 75 வாக்குகள் அளிக்கப்பட்டநிலையில் அதற்கு எதிராக 117 வாக்குகள் அளிக்கப்பட்டன.

பாராளுமன்றத்தில் அண்மையில் அனுமதிக்கப்பட்ட நிகழ்நிலை காப்பு சட்ட மூலம் உயர் நீதிமன்றத்தின்  பரிந்துரைகளை மீறி  சபாநாயகரினால்   நிறை வேற்றப்பட்டமை , பொலிஸ் மா அதிபர் நியமனத்தில் அரசியலமைப்பை மீறி சபாநாயகர் செயற்பட்டமை  ஆகிய இரு பிரதான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து  பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி  உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப்  பிரேரணையை   பாராளுமன்ற பிரதிப் பொதுச் செயலாளர் ஷமிந்த குலரத்னவிடம் கடந்த 5ஆம் திகதி கையளித்தன.

சபாநாயகருக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள்  கூட்டணி, தமிழ் தேசியக்கூட்டமைப்பு , ஜே .வி.பி.  ஆகிய கட்சிகளை  பிரதிநிதித்துவப்படுத்தி   44  எம்.பி.க்கள் கையெழுத்திட்டிருந்தனர்.

இதனையடுத்து ஒழுங்குப்பத்திரத்தில் சபாநாயகருக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை உள்வாங்கப்பட்டதுடன் மார்ச் 19, 20 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுப்பதென கட்சித்தலைவர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு  கடந்த 19 ஆம் திகதி விவாதத்திற்கு எடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் கூடிய கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் மேலும் ஒரு நாளை வழங்கி 21 ஆம் திகதியும் விவாதத்தை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

அதன் பிரகாரம் கடந்த  19ஆம் திகதி முதல் இன்று 21ஆம் திகதிவரை  விவாதம் இடம்பெற்ற நிலையில்  மாலை 4,30 மணிக்கு விவாதம் முடிவுக்கு வந்தது.

அதனைத்தொடர்ந்து பிரேரணை மீது வாக்கெடுப்பை  எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி.யினால் வாக்கெடுப்பு கோரிய நிலையில் சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ் வாக்கெடுப்புக்காக கோரம் மணியை ஒலிக்கவிடுமாறு உத்தரவிட்டார். அதன பிரகாரம்  மாலை 4.40 மணியளவில்  இலத்திரனியல் முறையிலான வாக்கெடுப்பு இடம்பெற்றது.

இந்த வாக்கெடுப்பின் போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு  எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப்  பிரேரணைக்கு ஆதரவாக எதிர் கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி,ஐக்கிய மக்கள்  கூட்டணி,தமிழ் தேசியக்கூட்டமைப்பு, ஜே .வி.பி.. தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றை சேர்ந்த  எம்.பி.க்கள் ஆதரவாக  வாக்களித்தனர். என்றாலும் விக்னேஸ்வரன் எம்.பி சபையில் இருக்கவில்லை.

அதேவேளை நம்பிக்கையில்லாத் பிரேரணைக்கு எதிராக அரசுடன் இனணந்து எதிரணி பக்கத்தில் சுயாதீனமாக செயற்படும் ஏ.எல்.எம்.அதாவுல்லா . துமிந்த திசாநாயக்க, நிமல் லான்ஸா, உள்ளிட்ட எம்.பிக்கள் வாக்களித்ததுடன் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த ஏ.எச்.எம். பெளசி, வடிவேல் சுரேஷ் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் ஆகியோரும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர்.

இந்நிலையிலேயே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு  எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப்  பிரேரணை  42 மேலதிக  வாக்குகளினால்  தோற்கடிக்கப்பட்டது.

வாக்களிப்பில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய

இதேவேளை, சிறைப்படுத்தப்பட்டிருக்கும் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றாத போதும் அவர் வாக்களிப்பில் கலந்துகொண்டு பிரேரணைக்கு எதிராக வாக்களித்திருந்தார்.

வாக்கெடுப்பில் 33 உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை

அதேவேளை, நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கட்சித் தலைவர்களான அநுரகுமார திஸாநாயக்க, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சீ,வி. விக்னேஸ்வரன் உள்ளிட்ட 33பேர் கலந்துகொண்டிருக்கவில்லை.