திமுக கூட்டணிக்கு கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரவு

27 0

 “பாஜக எனும் பாசிச சனாதன சக்தியை வீழ்த்த, அடிமை அதிமுகவை விரட்ட, நாம் ஒரு குடையின் கீழ் அணியமாக வேண்டியிருக்கிறது” என்றுகூறி திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக எனும் பாசிச சனாதன சக்தியை வீழ்த்த, அடிமை அதிமுகவை விரட்ட, நாம் ஒரு குடையின் கீழ் அணியமாக வேண்டியிருக்கிறது. அதற்கான களமாக இந்த மக்களவை தேர்தலை பயன்படுத்தி நாட்டை காக்கவேண்டும்.மதவெறி சக்திகளை அடியோடு வீழ்த்தி, இந்தியாவில் மதநல்லிணக்கம் மாண்புற, மக்கள் ஜனநாயகத்தை மீட்க, சமூக நீதியை காக்க ‘இண்டியா’ கூட்டணியை 2024 மக்களவை தேர்தல் களத்தில் வெற்றிபெறச் செய்யவேண்டும் என்கிற ஒற்றை இலக்குடன் திமுகவை முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரிக்கிறது.

இனி மோடி ஆட்சி மீண்டும் வந்தால் இந்திய பெருமுதலாளிகளின் கையில், கார்ப்ரேட்டின் கொள்ளைக் கூடாரமாகிவிடும். கடந்த 10 ஆண்டுகாலமாக மத்தியில் ஆட்சி செய்த பாஜக அரசின் மக்கள் விரோத ஆட்சியை அகற்றிட, தமிழகத்தில் அடிமை துரோகக் கட்சியான அதிமுகவை இந்த மக்களவை தேர்தலில் தோற்கடித்திட நமக்கு கிடைத்த சரியான வாய்ப்பாகும்.

திமுகவுக்கு பல்வேறு தோழமைக் கட்சிகள் தமது ஆதரவை தெரிவிக்கும் அதே வேளையில் பலம் வாய்ந்த இக்கூட்டணியை 40 இடங்களிலும் வெற்றிப்பெற செய்ய திமுகவுக்கு எங்களது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறோம்.

மக்கள் விரோத சனாதன சக்திகளை விரட்ட, அடிமை துரோக அதிமுகவை வீழ்த்த திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து 40 தொகுதிகளிலும் முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி தனது பிரச்சாரத்தை மேற்கொள்ளும்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்ட வேண்டும், தேவர் ஜெயந்தியை அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஐந்து கோரிக்கைகளையும் கருணாஸ் வைத்துள்ளார்.

நடிகரான கருணாஸ் 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று திருவாடனை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். ஜெயலலிதா மறைவுக்கு பின் சசிகலா அணியின் பக்கம் இருந்த கருணாஸ் கூவத்தூர் சம்பவத்தில் முக்கிய அங்கமாக இருந்தார். அதன்பின் எடப்பாடி பக்கம் செல்லாமல் திமுக கூட்டணிக்கு பக்கம் சாய்ந்தார். எனினும் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. இந்தநிலையில் தான் வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார் கருணாஸ்.