பாராளுமன்ற மரபுகளை பாதுகாக்க சபாநாயகர் தவறியுள்ளார்! ஹக்கீம் சபையில் குற்றச்சாட்டு

34 0

நிறைவேற்றுத்துறையின் தேவைக்காக செயற்படாமல் பாராளுமன்ற மரபுகளை பாதுகாப்பதே சபாநாயகரின் பொறுப்பு. அதனை அவர் செய்ய தவறியுள்ளார்.

அதனாலேயே சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர தீர்மானித்தோம். சபாநாயகர் தவறு செய்யும்போது அதனை சுட்டிக்காட்டி சரி செய்யவேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு இருக்கிறது. அதனை செய்ய அதிகாரிகளும் தவறியுள்ளனர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (20) இரண்டாது தினமாக  இடம்பெற்ற சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

இந்த பாராளுமன்ற காலத்தில் பல்வேறு விடயங்களை எங்களுக்கு காணக்கூடியதாக இருந்தன. தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி பதவி விலகினார். அதன் பின்னர் அமைச்சரவை பதவி விலகியது. அதனைத் தொடர்ந்து பதில் ஜனாதிபதி ஒருவர் பாராளுமன்றம் மூலம் தெரிவு செய்யப்பட்டமை, தற்போது சபாநாயகருக்கு எதிராக  நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்திருக்கிறது.

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை நாங்கள் உடனடியாக கொண்டுவந்தது அல்ல. பல சந்தர்ப்பங்களில் அவர் சபையின் பொறுப்பை பாதுகாக்க தவறி வந்துள்ளார்.

குறிப்பாக நிகழ்நிலை காப்புச் சட்டத்தை சபையில் அனுமதிக்கும்போது, அது தொடர்பாக இருந்த குறைபாடுகளை நாங்கள் சுட்டிக்காடியிருந்தபோதும் சபாநாயகர் அதனை கண்டுகொள்ளாமல் செயற்பட்டார்.

நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் 44 திருத்தங்கள் காணப்பட்டன, அதில் 31 வாசகங்களுக்கு உயர் நீதிமன்றம் திருத்தம் மேற்கொண்டிருந்தது. அந்த திருத்தங்கள் முறையாக மேற்கொள்ளாமலே குறித்த சட்டத்தை பாராளுமன்றத்தில் அனுமதிக்க சபாநாயகர் நடவடிக்கை எடுத்தார்.

சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு பாராளுமன்ற அதிகாரிகளும் பொறுப்பாகும். சபாநாயகர் தவறு செய்யும்போது அதனை சுட்டிக்காட்டி திருத்துவது அதிகாரிகளின் பொறுப்பாகும். அதனை அவர்கள் செய்ய தவறி இருக்கின்றனர்.

மேலும் சபாநாயகர் நிறைவேற்றுத் துறையின் தேவைக்கு செயற்படாமல் சொந்த தீர்மானம் மேற்கொண்டு செயற்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.பொலிஸ் மா அதிபர் நியமனத்தின்போது அரசியலமைப்பு சபையிலும் அவ்வாறே அவர் செயற்பட்டார்.

முதலாவது சார்ள்ஸ் மன்னரின் காலத்தில் பிரித்தானிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக இருந்த சபாநாயகருக்கு ஏதாேவொரு விடயத்தை செய்யுமாறு மன்னன் அழுத்தம் பிரயோகித்தார். அதற்கு சபாநாயகர் பதிலளிக்கையில், எனது கண்களுக்கு காண்பது பாராளுமன்றம் உத்தரவிடும் விடயங்கள். எனது செவிகளுக்கு புலனாவது பாராளுமன்றம் உத்தரவிடும் விடயங்கள். எனது நாவினால் வெளிப்படுவது பாராளுமன்றம் எனக்கு உத்தரவிட்ட விடயங்கள். அதனை மீறி செயற்பட எனக்கு இயலாது. அதனால் உங்களின் உத்தரவை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என பதிலளித்துள்ளார்.

இந்த சம்பவம் எமது சபாநாயகருக்கும் பொருத்தமாகும். நிறைவேற்றுத்துறையின் தேவைக்காக செயற்படாமல் சபையின் மரபுகளை பாதுகாப்பதே சபாநாயகரின் கடமை. ஆனால் சபாநாயகர் அதனை செய்ய தவறி இருக்கிறார். அதனாலே சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர தீர்மானித்தோம் என்றார்.