ஆளும் தரப்பின் உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தனவை கோப் குழுவின் தலைவராக நியமித்து பாராளுமன்றத்தை மலினப்படுத்தும் செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.இந்த தவறு திருத்தம் செய்யப்பட வேண்டும். ரோஹித அபேகுணவர்தனவை பதவி நீக்கி தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்ற அமர்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
கோப் குழுவின் உறுப்பினர் என்ற வகையில் இந்த வலியுறுத்தலை அரசாங்கத்திடம் முன்வைக்கிறேன்.பாராளுமன்ற குழுக்களில் கோப் குழு முக்கியமானது.கோப் குழுவின் தலைவர் கணக்காளர் நாயகத்துடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.கோப் குழுவின் தலைவராக ஆளும் தரப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன நியமிக்கப்பட்டுள்ளமைக்கு பலர் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். கோப குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து எரான் விக்கிரமரத்ன விலகியுள்ளார்.
கோப் குழுவின் தலைவர் நியமனத்தில் இவ்வாறான முரண்பாடுகள் காணப்படுகின்ற நிலையில் அதிகாரிகள் எவ்வாறு குழுவில் முன்னிலையாகுவார்கள்.கோப் குழுவின் தலைவராக ரோஹித்த அபேகுணவர்தனவை நியமித்து பாராளுமன்றத்தை மலினப்படுத்தும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
தவறை அரசாங்கம் திருத்திக் கொள்ள வேண்டும்.ஆகவே ரோஹித்த அபேகுணவர்தனை தலைவர் பதவியிலிருந்து நீக்கி பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய கோப் குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறேன் என்றார்.

