யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை பொருத்துமாறு கோரிக்கை

25 0

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரிக்கு அருகில் உள்ள கல்லூரி வீதி அண்மையில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள மக்களின் காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடேஸ்வரா கல்லூரிக்கு அருகில் உள்ள கல்லூரி வீதியில் உள்ள ரயில் கடவைக்கு கதவு பொருத்துமாறும் அங்கு பொருத்தப்பட்டுள்ள சமிக்ஞை விளக்கையும் இயங்க செய்ய ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களும் பாடசாலை சமூகத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்பு இங்கு ரயில் தண்டவாளம் அமைக்கும் போது கல்லூரி வீதி கடவைக்கு கடவைக்கதவு அமைப்பதற்கு ஏற்ற வசதிகள் செய்யப்பட்ட போதும் இப்பகுதி இராணுவ கட்டுப்பாட்டில் இருந்ததால் மக்கள் பயன்பாடு இல்லாததால் அமைக்கப்படவில்லை.

எனினும் இந்த வழமையான கடவைக்கு பதிலாக 50 மீற்றர் தூரத்தில் 515 ஆவது படைப்பிரிவு இராணுவத்தினர் தாம் பயன்படுத்திய பாதைக்கு முன்பாக அப்போது கடவைக் கதவு அமைக்கப்பட்டது. எனினும் இராணுவத்தினர் பயன்படுத்திய பாதை பொதுமக்களின் காணியாகும். இவ்வாறான நிலையில் தற்போது மக்களின் காணியை அண்மையில் கையளித்துவிட்டு இராணுவத்தினர் சென்றுள்ள நிலையில் அங்குள்ள ரயில் கடவை கதவை அகற்றி கல்லூரி வீதி கடவையில் பொருத்துவதுடன் அங்கு உள்ள சமிக்ஞை விளக்கையும் இயங்க செய்ய ரயில் திணைக்கள அதிகாரிகள் விரைந்து செயற்படவேண்டும்.

தற்போது மக்கள் மீள்குடியேற காணிகள் துப்பரவாக்க சென்றுவருகின்றனர். எனவே உரிய அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களும் பாடசாலை சமூகத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.