தருமபுரியில் கழுதைகள் மூலம் வாக்குப்பதிவு உபகரணங்கள் மலைக்கு கொண்டு செல்வது முடிவுக்கு வந்தது!

18 0

தருமபுரி மாவட்டத்தில் 2 மலைக் கிராமங்களுக்கு டிராக்டர்கள் செல்லும் வகையில் சாலை அமைக்கப்பட்டதால் தேர்தலுக்கான வாக்குப்பதிவு உபகரணங்கள் கழுதைகள் மீது பயணிக்கும் நடைமுறை முடிவுக்கு வந்துள்ளது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியத்துக்கு உட்பட்டது கோட்டூர் மற்றும் ஏரிமலை ஆகிய மலைக் கிராமங்கள். இவ்விரு கிராமங்களுக்கும் சாலை வசதி இல்லாததால் தற்போது வரை இந்த மலைகளில் வசிக்கும் மக்கள் மலையடிவாரம் வரை நடந்து சென்ற பிறகே பேருந்துகள் மூலம் வெளியூர்களுக்கு செல்கின்றனர். இந்த மலைகளில் வசிக்கும் மக்களுக்கு மாதம் தோறும் வழங்கப்படும் ரேஷன் பொருட்களும், தேர்தல்களின் போது பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு உபகரணங்களும் வழக்கமாக கழுதைகள் உதவியுடன் தான் எடுத்துச் செல்லப்படுகின்றன.

இந்நிலையில், கடந்த 2 மாதத்துக்கு முன்னர் மாவட்ட ஆட்சியர் சாந்தி கோட்டூர் மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சி வரை அலுவலர்களுடன் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப் பின்னர், ‘இனி வரவிருக்கும் தேர்தல்களின்போது கோட்டூர் மற்றும் ஏரிமலை கிராமங்களுக்கு கழுதைகள் மீது வாக்குப்பதிவு உபகரணங்கள் எடுத்துச் செல்வதை தவிர்த்து டிராக்டர் போன்ற வாகனங்கள் மூலம் எடுத்துச் செல்லும் வகையில் முதல்கட்டமாக இம்மலைகளுக்கு மண் சாலைகள் ஏற்படுத்தப்படும்’ என்று ஆட்சியர் கூறினார்.

தற்போது மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மலைகளுக்கு மண் சாலைகள் அமைக்கப்படும் என ஆட்சியர் அளித்த வாக்குறுதியின் நிலை குறித்து இரு கிராம மக்களிடம் விசாரித்தபோது, ‘கோட்டூர், ஏரிமலை ஆகிய மலைக் கிராமங்களுக்கு டிராக்டர் செல்லும் வகையில் ஓரளவு சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்த சாலையில் ஓரிரு இடங்கள் மட்டும் சவால் நிறைந்தவையாக உள்ளன. அதையும் சீரமைத்து தார்சாலை அமைத்துக் கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும்’ என்றனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சாந்தியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: கோட்டூர் மலைக் கிராமத்துக்கு அடிவாரத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரமும், ஏரிமலை கிராமத்துக்கு 4.2 கிலோ மீட்டர் தூரமும் கொண்ட நடைவழி சாலை மட்டுமே இருந்தது. கோட்டூர் மலை வாக்குச் சாவடி மையத்தில் 310 வாக்காளர்களும், ஏரிமலை வாக்குச் சாவடி மையத்தில் 324 வாக்காளர்களும் உள்ளனர். சுதந்திரம் பெற்று இவ்வளவு ஆண்டுகளைக் கடந்தும் சாலை வசதியின்றி தவிக்கும் இவ்விரு கிராமங்களுக்கும் சாலை வசதி ஏற்படுத்தும்படி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.