சிறீலங்கா பேரினவாத அரசின் இனவாத மதவாத செயற்பாடுகளை ஈழத்தமிழர் பேரவை ஐக்கிய இராச்சியம் வன்மையாக கண்டிக்கிறது!

102 0

 

தமிழர் தாயகத்தில் உக்கிரமடைந்து வரும் சிறீலங்கா பேரினவாத அரசின் இனவாத மதவாத செயற்பாடுகளை ஈழத்தமிழர் பேரவை ஐக்கிய இராச்சியம் வன்மையாக கண்டிக்கிறது!

உலகெங்கிலும் வாழும் சைவர்களின் அதி முக்கியத்துவம் வாய்ந்த நாளான சிவராத்திரி நாள் பூசையானது இம்மாதம் 8 ஆம் நாளன்று அனைத்து சிவன் ஆலயங்களிலும் கடைப்பிடிக்கப்பட்ட நிலையில் தமிழர் தாயகப் பகுதியான வவுனியா மாவட்டம் ஒலுமடுவில் உள்ள வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட பக்தர்களை காவற்துறையினர் அவ்விடத்தில் இருந்து அகற்றி மத சுதந்திரத்தை முற்றாக மீறியமையை ஈழத்தமிழர் பேரவை ஐக்கிய இராச்சியம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது.

ஒவ்வொருநாளும் தமிழர் தாயகத்தில் எம் மக்கள் ஏதோ ஒரு வகையில் அடக்குமுறைக்கு உள்ளாகியே வருகின்றனர். கடந்த ஆண்டும் இவ்வாறான நிலைமை ஏற்படுத்தப்பட்டிருந்தமையால், தமது சொந்த நிலத்தில் நீதிமன்ற அனுமதியோடு வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டிய ஒரு மோசமான நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருப்பது, அம்மண்ணில் இனவாத சிறிலங்கா அரசின் ஆளுகையின் கீழ் எம்மக்கள் சுதந்திரமாக வாழமுடியாது என்பதனையே எடுத்துக்காட்டுகிறது.

நீதிமன்ற உத்தரவை மதிக்காத சிறிலங்கா காவற்துறை முக்கியமாக ஆதிசிவன் ஆலயத்தில் நடைபெற்ற வழிபாடுகளுக்கு தடைகளை ஏற்படுத்தும் முகமாக அங்கு கூடியிருந்த பெண்கள் குழந்தைகள் உட்பட நூற்று ஐம்பதிற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கான குடிதண்ணீர் விநியோக வாகனத்தை இடைமறித்து அதிலிருந்த மொத்த கொள்ளவு நீரையும் வீணாக்கி அவர்களை நீர் அருந்தவிடாமல் சிறிலங்கா காவற்துறையினர் சித்திரவதை செய்தமை மிலேச்சத்தனமான, பாரிய அடிப்படை மனித உரிமை மீறலாகும். அதுமட்டுமன்றி பூசை நடைபெறும் புனித தலத்தில் காலணிகளோடு உட்புகுந்தமை அம்மக்களின் மத நம்பிக்கையை அவமதிக்கும் மோசமான செயலாகும்.

அன்றைய தினம் வழிபாடுகளில் ஈடுபட்ட பக்தர்களான திரு தம்பிராசா மதிமுருகராசா, திரு துரைராசா தமிழ்ச்செல்வன், திரு மகேந்திரன் நரேந்திரன், திரு சிவம் இலக்சன், திரு கந்தசாமி கௌரிகாந்தன், திரு திலகநாதன் கிந்துயன், திரு இராசரத்தினம் விநாயகமூர்த்தி, திரு சுப்பிரமணியம் தவபாலசிங்கம் ஆகியோர் சிறிலங்கா காவற்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டதுடன், அவர்களுக்கு உதவச் சென்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினரையும் தாக்கியுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் சட்டத்திற்கு புறம்பான வகையில் நிர்வாணப்படுத்தப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்னர்.

சிறைச்சாலையில் இடவசதியின்மையால் இருப்பதற்குக் கூட இடமில்லாத நிலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். சிறையில் உள்ளவர்களில் 5பேர் தம்மை விடுதலை செய்யக்கோரி, உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களினதும் அவர்களின் குடும்பங்களின் நிலைமை மோசமான சூழலில் காணப்படுவதால் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென ஈழத் தமிழர் பேரவை ஐக்கிய இராச்சியம் கேட்டுக்கொள்கிறது.

தமிழரின் தேசிய வாழ்வையும் வளத்தையும் அழித்து, தமிழர் தேசத்தையே சிங்கள இராணுவ இறையாட்சியின் கீழ் அடிமைப்படுத்துவதுதான் சிங்கள அரசின் அடிப்படையான நோக்கம். இந்தவகையில் வடக்கு கிழக்கு எங்கும் தமிழர்களின் தொன்மையான வரலாற்று சிறப்பு மிக்க நிலப்பரப்புக்களில் தொல்லியல் திணைக்களம் என்கின்ற பெயரில் தமிழர் நிலங்களை அபகரித்து பௌத்த தூபிகளையும், புத்தர் சிலைகளையும் நிறுவி தொடர்ந்து தமிழர் மீது கலாச்சார இனவழிப்பை நிகழ்த்திவரும் பேரினவாத சிறிலங்கா அரசின் இந்த இனவாத மற்றும் மதவாதச் செயலை நாம் வன்மையாகக் கண்டிப்பதோடு, பொருளாதாரச் சிக்கலில் இருந்து மீள சர்வதேச நாணய நிதியத்திடம் பெறும் நிதியை தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கும் குறிப்பாக எமது பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களையும், பௌத்த விகாரைகளையும் அமைக்க சிறிலங்கா அரசு பயன்படுத்தி வருகின்றமையை சர்வதேச நிதிவழங்கும் நாடுகள் கவனத்தில் எடுக்கவேண்டும் என்பதையும் ஈழத்தமிழர் பேரவை ஐக்கிய இராச்சியம் வலியுறுத்துகிறது.

சிறிலங்கா சட்ட திட்டங்களில் நம்பிக்கை இழந்த மக்களாக, அந்நாட்டு காவற்துறையால் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ள எமது உறவுகளை விடுவிக்க ஒன்றுபட்ட மக்களாக அணிதிரள்வோம். எத்தனை துயர் வரினும் எத்தனை இடர் வரினும் நாம் எமது விடுதலைப் பாதையிலே தொடர்ந்து போராடுவோம்!