இந்தியாவின் அதானி நிறுவனத்தினால் மன்னாரில் முன்னெடுக்கப்படவிருக்கும் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தினால் அச்சூழலுக்கும், மக்களுக்கும் மிக மோசமான பாதிப்புக்கள் ஏற்படும் எனவும், ஆகவே இத்திட்டத்தை இடைநிறுத்த வேண்டும் எனவும் சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கு வருகை தந்திருக்கும் அதானி கிரீன் எனேர்ஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சாகர் அதானி மற்றும் அதானி எனேர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம செயற்பாட்டு அதிகாரியுமான அனில் சர்தானா ஆகியோருடன் மன்னார் மற்றும் பூநகரியில் 484 மெகாவோற் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்துக்கான மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தம் குறித்த இருதரப்பு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அவரது எக்ஸ் தளப்பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இருப்பினும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் பல்வேறு சூழலியல் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரும் எனவும், ஆகவே இதனை உடனடியாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தி மன்னார் மாவட்டத்தை தளமாகக்கொண்டு இயங்கிவரும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் சிலர் கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையத்துடன் இணைந்து கடந்த 5ஆம் திகதி மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் வெனுர பெர்னாண்டோவிடம் கடிதமொன்றைக் கையளித்தனர்.
அத்தோடு, இவ்விவகாரம் தொடர்பில் அவர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு அளித்தனர்.
சுமார் 43,000 குடும்பங்களைக் கொண்டிருக்கும் மன்னாரில் 250 மெகாவோற் காற்றாலை மின் உற்பத்திக்கென 52 டேர்பைன்களைப் (விசைப்பொறி / விசையாழி) பொருத்துவதால் பறவைகளின் வாழிடங்கள் அழிக்கப்பட்டு, அவை வேறு பகுதிகளுக்கு இடம்பெயரல், பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் பாதிப்படைதல், பனை மரங்கள் சேதமடைதல், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படல் போன்ற பல்வேறு சூழலியல் மற்றும் அது சார்ந்த சமூக பிரச்சினைகள் ஏற்படும் என அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அதேவேளை பறவைகளின் இடப்பெயர்வு, வெள்ளப்பெருக்கினால் ஏற்படக்கூடிய பாதிப்பை அதிகப்படுத்தல், கடற்சூழல் பாதிப்புக்கள் என்பன உள்ளடங்கலாக இக்காற்றாலைத் திட்டத்தினால் ஏற்படக்கூடிய சூழல் பாதிப்புக்களை சுட்டிக்காட்டியிருக்கும் சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையம், இத்திட்டத்தின் விளைவுகள் தொடர்பில் முறையான சூழலியல் மதிப்பீடு மேற்கொள்ளப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது.
அதுமாத்திரமன்றி இத்திட்டமானது உள்நாட்டு வலுசக்தி உற்பத்தி இயலுமையை கேள்விக்குள்ளாக்கும் என சுட்டிக்காட்டியிருக்கும் அந்நிலையம், பிரேரிக்கப்பட்டுள்ள காற்றாலையானது நகர அபிவிருத்தி அதிகார சபையின் அபிவிருத்தித் திட்டத்துக்கு அமைவானதாக இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
ஆகவே நேர்மறையான விளைவுகளை விட சூழலுக்கும், மன்னார் மக்களுக்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய இந்தத் திட்டத்தை தாம் முழுமையாக எதிர்ப்பதாக சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையம் தெரிவித்துள்ளது.

