சென்னையில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம்

17 0

சென்னைக்கு அருகே சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பழைய கட்டிடங்களை இடித்து அகற்றவும், கல்லூரியை செட்டிக்குளத்துக்கு மாற்றவும் உயர் நீதிமன்றக் கிளை தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, சுகாதாரத் துறை சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்து நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: சித்த மருத்துவ முறை, தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில், குறிப்பாக தோரணமலை, அழகர்மலை, அத்திரி, குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் உருவானது. ஒவ்வொரு மலையிலும் சித்தர்கள் பலர் தங்கி, சித்த மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.

அத்திரி மலையில் அகத்தியர் தலைமையில் அறுவைசிகிச்சை மேற்கொண்டதாக ஓலைக் குறிப்புகள் உள்ளன. அதேபோல, தோரணமலையில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான மூலிகைகள் உள்ளன. நமதுசித்த மருத்துவம் மனித குலத்துக்கு நன்மை பயப்பதுடன், இந்தியாவின் பெருமையை உலகம் முழுவதும் எடுத்துச் செல்கிறது.

குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் ஆயுர்வேதத்துக்கு தனி பல்கலைக்கழகங்கள் உள்ளன. தமிழகத்தில் தற்போது வரை சித்த மருத்துவத்துக்கு தனி பல்கலைக்கழகம் இல்லை. சித்த மருத்துவம் குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ள, முறையான ஆய்வு வசதிகளும் தமிழகத்தில் இல்லை.

இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கும் தமிழக அரசின் திட்டத்தைப் பாராட்டுகிறோம். `தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்டம் 2022′ தமிழக ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது.

சென்னை அருகே சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்க கொள்கை முடிவு எடுக்கப்பட்டதாக, தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. திட்டங்களின் தேவையைவிட, அதிகாரிகள் தங்களின் நிர்வாக வசதிக்காக திட்டங்களை சென்னைக்கு மாற்றுகிறார்கள். இந்தப் போக்கை ஏற்க முடியாது. எனவே, சென்னையில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

சித்த மருத்துவக் கல்லூரி 1956-ல்குற்றாலத்தில் தொடங்கப்பட்டு, 1964-ல் பாளையங்கோட்டைக்கு மாற்றப்பட்டது. இதனால் சித்த மருத்துவத்தின் பிறப்பிடமாக உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அருகே, பொருத்தமான இடத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க அரசு முன்வர வேண்டும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.