இலங்கை, நேபாளம், மாலைத்தீவு நாடுகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்புகளை விரிவுபடுத்தும் சீனா

16 0

தெற்காசிய நாடுகளுடனான பாதுகாப்பு விவகாரங்களில் மேலும் ஒத்துழைப்புகளை விரிவுபடுத்தி வரும் சீனா, தனது உயர்மட்ட இராணுவ பிரதிநிதிகள் குழுவை இலங்கை, மாலைத்தீவு நேபாளத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்த விஜயமானது தெற்காசியாவில் சீன மூலோபாய போட்டியாளரை  எதிர்கொள்வதற்கான உந்துதலின் முக்கியமான நகர்வாக கருதப்படுகிறது.

சீனாவுடன் ‘இராணுவ உதவி’ ஒப்பந்தத்தில் மாலைத்தீவு கடந்த வாரத்தில் கைச்சாத்திட்டிருந்தது. மறுபுறம் மாலைத்தீவில் மூலோபாய தீவுக்கூட்டத்தில் நிலைகொண்டிருந்த இந்திய துருப்புக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டது. இதேவேளை, இலங்கை மற்றும் நேபாளத்துக்கு செல்வதற்கு முன்னர் இந்த உயர்மட்ட இராணுவ குழு, சீன சார்பு மாலைத்தீவு ஜனாதிபதியான மொஹமட் முய்ஸுவை சந்தித்திருந்தமையை பெய்ஜிங் கடந்த புதன்கிழமை உறுதி செய்தது.

இவ்வாறானதொரு நிலையில் குறித்த மூன்று நாடுகளிலும் இராணுவ உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ளவும், பிராந்திய பாதுகாப்பு பிரச்சினைகள் பற்றிய விடயங்கள் தொடர்பிலும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டுள்ள அதே சமயம், சீன இராணுவத்தின் சர்வதேச இராணுவ ஒத்துழைப்புத்துறையின் அதிகாரிகளின் பிரதிநிதிகள் குழு இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது பற்றிய ஆழமான ஆலோசனைகளில் கவனம் செலுத்தியுள்ளது.

இந்திய பெருங்கடலில், இலங்கையில் சீனாவின் வளர்ந்து வரும் இருப்பு மற்றும் மாலைத்தீவில் அதன் செல்வாக்கு ஆகியவற்றில் இந்தியா சந்தேகம் கொள்கிறது. அத்துடன் கிழக்கு – மேற்கு சர்வதேச கப்பல் வழித்தடத்தில் இந்த தெற்காசிய தீவு நாடுகள் இரண்டுமே மூலோபாய ரீதியாக முக்கியத்துவம் பெறுகின்றன.

பெய்ஜிங் நேபாளத்துடனும் நெருங்கிய உறவினை கொண்டுள்ளது. எனவே, இந்திய பெருங்கடலை நோக்கிய சீனாவின் எதிர்கால பார்வையின் முக்கிய நகர்வாகவே சீன இராணுவ குழுவின் இந்த விஜயம் கருதப்படுகிறது.