கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட மனிதப்புதைகுழிகள் தொடர்பில் அமெரிக்கா ஆராய்வு

19 0

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகளிடம் கொக்குக்தொடுவாய் உள்ளிட்ட மனிதப்புதைகுழிகள் மற்றும் காணாமல்போனோர் தொடர்பான நிலுவை வழக்குகள் தொடர்பில் அமெரிக்கத் துணைத்தூதுவர் டக்ளஸ் ஈ.சொனெக் விவரமாகக் கேட்டறிந்துள்ளார்.

வட, கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் அமெரிக்கத் துணைத்தூதுவர் டக்ளஸ் ஈ.சொனெக் மற்றும் வடக்கைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் சட்டத்தரணிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று முன்தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது அமெரிக்கத் துணைத்தூதுவர் சொனெக் கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட மனிதப்புதைகுழிகள் தொடர்பில் விவரமாகக் கேட்டறிந்ததுடன், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகள் பற்றியும் கேட்டறிந்துள்ளார்.

இருப்பினும் இச்சந்திப்பிலோ அல்லது துணைத்தூதுவருடனான வேறு பிரத்யேக சந்திப்புக்களிலோ பங்கேற்பதற்கு வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கப் பிரதிநிதிகளுக்கு அழைப்புவிடுக்கப்படவில்லை எனவும், ‘இச்சந்திப்பில் கலந்துகொள்வதற்கு உங்களுக்கு ஏன் அழைப்புவிடுக்கப்படவில்லை?’ என சங்கத்திடம் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலக அதிகாரிகள் வினவியதாகவும் அறியமுடிகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் வட, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் நீண்டகாலமாக இயங்கிவரும் தமக்கு இச்சந்திப்பில் பங்கேற்பதற்கு அழைப்புவிடுக்கப்படாமை குறித்து வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

இது இவ்வாறிருக்க இச்சந்திப்பு தொடர்பில் தமது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதரகம், பெரும்பாலான இலங்கையர்கள் காணாமல்போன தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியாமல் இருப்பதாகவும், அக்குடும்பங்கள் உண்மையை அறிந்துகொள்வதற்கு உதவுவதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.