உதயநிதிக்கு எதிரான அவதூறு வழக்கை நிராகரிக்கக் கூடாது

30 0

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கை நிராகரிக்கக் கூடாது என எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘சனாதனத்துக்கான அர்த்தத்தை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேடிக் கொண்டிருப்பதாகவும், கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக ஒளிந்திருப்பதாகவும்’ எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்தை வெளியிட்டிருந்தார்.இது தொடர்பாக உதயநிதிக்கு எதிராக ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தனக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கை நிராகரிக்கக் கோரி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிராகரிப்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிசாமி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தன்னை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசியதை ஒப்புக்கொண்டிருக்கிறார் என்றும், எனவே அவர் பேசியது அவதூறு கருத்தா இல்லையா என்பது விசாரணையில் தான் முடிவு செய்ய முடியும் என்பதால் உதயநிதிக்கு எதிராக தொடர்ந்த வழக்கை நிராகாரிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாதங்களை கேட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஏப்ரல் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.