‘மோடிதான் மீண்டும் பிரதமர்’ – அமெரிக்க எம்.பி. நம்பிக்கை

31 0

இந்திய நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் தேர்வு செய்யப்படுவார் என்று அமெரிக்காவைச் சேர்ந்த அரசியல்வாதியும், மக்கள் பிரதிநிதிகள் அவையின் உறுப்பினருமான ரிச்சர்ட் டீன் மெக்கார்மிக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாகாணத்திலிருந்து மக்கள் பிரதிநிதிகள் அவைக்கு எம்.பி.யாக கடந்த 2023-ல்தேர்வு செய்யப்பட்டவர் ரிச்சர்ட் மெக்கார்மிக். குடியரசுக் கட்சியின் மூத்த தலைவராகவும் இருக்கிறார். இந்நிலையில் இந்தியாவின் பிரதமராக மோடி மீண்டும் தேர்வுசெய்யப்படுவார் என்று நேற்று ரிச்சர்ட் மெக்கார்மிக் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி் மீண்டும் தேர்வு செய்யப்படுவார் என்று நான் நிச்சயம் நம்புகிறேன். இதற்கு அவரது பரவலான புகழ் மற்றும் முற்போக்கான தலைமையே காரணம். அவரது கொள்கைகளும், தொலைநோக்குத் திட்டங்களும் நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளன.

நம்ப முடியாத அளவுக்கு அவர் மிகவும் பிரபலமாக இருக்கிறார். ஒரு முறை அவர் அமெரிக்கா வந்தபோது பிரதமர் மோடியுடன் நான் மதிய உணவு அருந்தினேன். கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்டவராக அவர் இருக்கிறார். அவர்தான் இந்தியாவின் பிரதமராக மீண்டும் வரப் போகிறார்.

அவரது தலைமையின் கீழ் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அபாரமாக உள்ளது. ஆண்டுதோறும் 4 முதல் 8 சதவீதம் வரை பொருளாதார வளர்ச்சி இருக்கிறது. இவ்வாறு ரிச்சர்ட் டீன் மெக்கார்மிக் கூறினார்.